சபரிமலைக்கு பெண்கள் சென்றால் கூட்டுத்தற்கொலை: சிவசேனா மிரட்டல்
- IndiaGlitz, [Monday,October 15 2018]
சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று ஐயப்பனை வழிபடலாம் என சுப்ரீம் கோர்ட் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்த தீர்ப்புக்கு பெண்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றது
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தாங்கள் ஏற்று கொள்வதாகவும், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு அறிவித்துள்ளது
இந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேரள மாநிலத்தின் சிவசேனா கட்சி உறுப்பினர் பெரிங்கமாலா அஜி கூறியபோது, வரும் 17-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்படுகிறது. பெண்கள் நுழைவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்தாலும், பெண்கள் வரக்கூடாது. அவ்வாறு பெண்கள் கோயிலுக்குள் வர முயற்சித்தால், எங்கள் கட்சியில் தற்கொலைப்படையினர் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்வார்கள் என்று மிரட்டியுள்ளார்.
மேலும் தற்கொலை படைக்கு என 7 பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், பெண்கள் சபரிமலைக்குள் நுழைந்தால் அந்த 7 பேர்களும் ஒவ்வொருவராக தற்கொலை செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.