80 அடி நீர்வீழ்ச்சியில் மாட்டிக் கொண்டு தவித்த தமிழக மருத்துவ மாணவர்… பரபரப்பு சம்பவம்!!!
- IndiaGlitz, [Tuesday,October 20 2020]
தமிழகத்தைச் சார்ந்த மருத்துவக் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தடைசெய்யப்பட்ட பகுதியில் மலையேற்றத்தில் ஈடுப்பட்டபோது 80 நீர்வீழ்ச்சியில் மாட்டிக் கொண்டு தவித்து இருக்கிறார். அவரை அம்மாநிலத்தின் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் அடுத்த கொடசாத்திரி பகுதியில் உள்ள மலையில் நீர்வீழ்ச்சி இருக்கிறது. இந்தப் பகுதிக்கு பெங்களூர் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சிலர் சுற்றுலா சென்றதாகக் கூறப்படுகிறது. அதில் தமிழகத்தைச் சார்ந்த சஞ்சீவ்(29) என்ற மாணவரும் இருந்திருக்கிறார். அவர் அங்குள்ள நீர்வீழ்ச்சியின் முகடுக்குச் செல்ல முயன்று பின்பு இறங்க முடியாமல் அங்கேயே தவித்ததாகக் கூறப்படுகிறது. 80 அடி உயரத்தில் உள்ள நீர்வீழ்ச்சியில் கிட்டத்தட்ட 2 மணிநேரமாக ஒற்றைக் கல்லில் நின்று தவித்து இருக்கிறார்.
இதைக் கீழே இருந்து பார்த்த அவரது நண்பர்கள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்து இருக்கின்றனர். உடனே அப்பகுதிக்கு விரைந்த வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள் மாணவர் சஞ்சீவை கயிறு கட்டி 5 மணி நேரப் போரட்டத்திற்குப் பின்னர் அவரை பத்திரமாக மீட்டு உள்ளனர். பின்னர் அந்த மாணவர்களை எச்சரித்து பெங்களூருவிற்கு திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.