விவாகரத்துப் பெற்றாரா ஷிகர் தவான்? உருக்கமாகப் பதிவிட்ட மனைவி!

இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம்வருபவர் ஷிகர் தவான். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆயிஷா முகர்ஜி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தற்போது ஷிகர்தவானின் மனைவி ஆயிஷா தனக்கு விவகாரத்து ஆகிவிட்டது எனக்கூறி இன்ஸ்டாகிராமில் உருக்கமாகப் பதிவிட்டு உள்ளார்.

ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரைச் சேர்ந்தவர் ஆயிஷா முகர்ஜி, ஒரு குத்துச்சண்டை வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் விவகாரத்துப் பெற்று கடந்த 2012 ஆம் ஆண்டு ஷிகர் தவானை திருமணம் செய்துகொண்டார். 10 வருடம் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்ட ஷிகர் தவான்- ஆயிஷா தம்பதிக்கு சோராவர் என்ற மகன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆயிஷா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள உருக்கமான பதிவில், “முதலில் விவாகரத்து என்பது ஒரு அழுத்தமான வார்த்தை என்று, இரு முறை விவாகரத்து ஆகும் வரை நினைத்துக் கொண்டிருந்தேன். வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை, எவ்வளவு அர்த்தங்கள் அதில் புதைந்திருக்கின்றன என்பதை முதல் முறை விவாகரத்து ஆகும்போது புரிந்து கொண்டேன். முதல் முறை விவாகரத்து ஆகும்போது மிகவும் பயந்தேன். நான் மிகவும் தவறான ஒரு விஷயத்தை செய்வதாகவும், தோல்வி அடைந்தவளாகவும் உணர்ந்தேன்.

சுயநலக்காரியாகவும், அனைவரையும் காயப்படுத்தியதாகவும் உணர்ந்தேன். என்னுடைய பெற்றோரை கைவிட்டதாக உணர்ந்தேன். என்னுடைய குழந்தைகளுக்கு அநீதி கொடுத்ததாக கருதினேன். விவாகரத்து அவ்வளவு மோசமான வார்த்தை.

இப்போது நினைத்துப் பாருங்கள் இரண்டாவது முறையாக நான் அதனைக் கடந்து செல்கிறேன். இது மிகவும் கொடூரமானது. இரண்டாவது முறையாக திருமணம் முறிந்த பின்னர் மிகவும் பயங்கரமாக இருந்தது. ஆனாலும் விவாகரத்தின் அர்த்தங்களைக் கற்றுக்கொண்டேன்.

விவாகரத்து என்பது திருமணம் என்ற பெயரில் என்னுடைய வாழ்க்கையை பிறருக்கு அர்ப்பணிக்காமல் என்னை தேர்ந்தெடுப்பதாகும். சில நேரங்களில் நாம் செய்யும் எதுவுமே வேலைக்கு ஆகாது. ஆனால் அது பரவாயில்லை. எனது உறவுகள், எதிர்கால உறவுகளுடன் எப்படி இருக்க வேண்டும் என்ற பாடங்களை கற்றுத்தருவது தான் விவாகரத்து.

நான் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் வலிமையானவளாக இருப்பதே விவாகரத்து“ எனப் பதிவிட்டுள்ளார். ஆயிஷாவின் இந்தப் பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி நெட்டிசன்கள் பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஷிகர் தவான் தனக்கு விவாகரத்து ஆனது குறித்து இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.