ஓடிடி தளத்தில் புது சாதனை படைத்த தமிழ் இயக்குநர்… கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழில் பில்லா, ஆரம்பம் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன் சமீபத்தில் பாலிவுட் சினிமாவில் ஷெர்ஷா எனும் திரைப்படத்தை இயக்கி வெளியிட்டு இருந்தார். கார்கில் போர் குறித்த திரைப்படமான இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்துவந்தது. அதனால் படப்பிடிப்பு முடிந்து ஒருவருடம் ஆகியும் படக்குழு இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடாமல் இருந்தது.

ஆனால் கடந்த மாதம் 12 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியான இந்தத் திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் அமேசான் ப்ரைமில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ வரிசையில் முதலிடத்தை பிடித்து இருக்கிறது. மேலும் 4,100 நகரங்கள், 210 நாடுகள் என ஒட்டுமொத்த உலகிலும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பார்த்திருக்கிறார்களாம்.

அதேபோல ஐஎம்பி இந்தத் திரைப்படத்திற்கு 8.9 புள்ளிகளை வழங்கி கொண்டாடி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கார்கில் போரில் இராணுவ வீரர் விக்ரம் பத்ரா சந்தித்த அனுபவங்களை மையமாக வைத்து “ஷெர்ஷா” திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் விக்ரம் வேடத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்து இருக்கிறார்.

தற்போது அமோசான் ப்ரைமில் அதிகம் விரும்பப்பட்ட திரைப்படம் அதேபோல விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றிருப்பது குறித்து படக்குழு அளவில்லா மகிழ்ச்சியை வெளியிட்டு வருகிறது. மேலும் படத்தை பெரிய திரையில் வெளியிட்டு இருக்கலாம்? என இன்னொரு பக்கம் ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவதையும் பார்க்க முடிகிறது.