உலகப்புகழ் பெற்ற அதிரடி மன்னன் புரூஸ்லீயின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்
- IndiaGlitz, [Tuesday,May 09 2017]
கடந்த சில வருடங்களாகவே பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படங்கள் இந்திய சினிமாவில் ஹிட்டாகி வரும் நிலையில் மீண்டும் ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் விரைவில் திரைப்படமாகவுள்ளது.
சில்க் ஸ்மிதா, மேரி கோம், தோனி, சச்சின் ஆகியோர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் வெற்றி பெற்ற நிலையில் தற்போது உலகம் முழுவதும் புகழ்பெற்ற அதிரடி மன்னனான புரூஸ்லீ அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் சேகர் கபூர் இயக்கவுள்ளார்.
'லிட்டில் டிராகன்' என்ற பெயரில் உருவாகும் இந்த படம் கடந்த 1950 -களில் புரூஸ்லீ, ஹாங்காங்கில் அனுபவித்த இளமைக் கால காதல், குடும்பத்தின் ஏமாற்றம், நட்பு, துரோகம், நிறவெறி எனப் பல பரிமாணங்களை வெளிக்கொண்டு வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தின் கதை விவாதத்தில் புரூஸ் லீ-யின் மகள், ஷேனன் லீ அவர்களும் பங்கெடுக்க உள்ளதாக தெரிகிறது.
இந்த படம் குறித்து இயக்குனர் சேகர் கபூர் கூறியபோது, ''புரூஸ் லீ மிகவும் திறமை படைத்த மற்றும் பிரபலமான தற்காப்புக் கலை வல்லுநர் என்பது தெரியும். இதைத் தவிர்த்து, புரூஸ் லீ என்பவர் யார் என்ற கேள்வியைத் தேடும் படைப்பாக இந்தப் படம் இருக்கும்" என்று கூறியுள்ளார்.
இயக்குனர் சேகர் கபூர், உலக நாயகன் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.