பறவைக்காக காரை விட்டுக்கொடுத்த பட்டத்து இளவரசர்: நவீன பாரி வள்ளல் என பாராட்டு
- IndiaGlitz, [Thursday,August 06 2020]
முல்லைக்கு தனது தேரை விட்டு கொடுத்த பாரி வள்ளல் குறித்த செய்தியை சங்கத் தமிழில் நாம் படித்திருக்கிறோம். இதனை பின்பற்றி சமீபத்தில் மதுரையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் சிட்டுக் குருவி கூடு கட்டியதால் அந்த இரு சக்கர வாகனத்தை சில மாதங்கள் பயன்படுத்தாமல் இருந்ததாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் பாரிவள்ளல் பரம்பரையின் அடுத்த வாரிசு என்று கூறப்படுவது போல் துபாயின் பட்டத்து இளவரசர் செயல்பட்டுள்ளார். துபாய் நாட்டின் பட்டத்து இளவரசராகவும், அந்நாட்டின் நிர்வாக கவுன்சில் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் என்பவர் மற்ற உயிரினங்களிடம் அன்பு காட்டி வருபவர் என்பதும் விலங்கியல் பூங்காவில் இருக்கும் ஏராளமான விலங்குகளை தத்தெடுத்து பராமரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இவர் தனது காரை சில வாரங்கள் பயன்படுத்தவில்லை. சமீபத்தில் இவர் தனது காரை சென்று பார்த்தபோது காரின் முன் பகுதியில் சிறிய பறவை ஒன்று கூடு கட்டி முட்டையிட்டு அடைகாத்து வந்ததை பார்த்தார். இதனையடுத்து அந்த காரை பயன்படுத்தாமல் அந்த சிறு பறவை பறவையின் முட்டை குஞ்சு பொறிக்கும் வரை யாரும் தனது காரை தொட வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார். முல்லைக்கு தனது தேரையே பரிசாக கொடுத்த பாரி வள்ளல் போல் சிறுபறவைக்காக தனது காரை பரிசாக கொடுத்த துபாய் பட்டத்து இளவரசர் குறித்த செய்திகள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது