3 பாகங்கள், பிரமாண்ட பட்ஜெட், மல்டி ஸ்டார்.. இதுதான் ஷங்கரின் அடுத்த படம்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ மற்றும் ராம் சரண் தேஜா நடித்து வரும் ’ஆர்சி 15’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களையும் அவர் இன்னும் ஒரு சில மாதங்களில் முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஷங்கரின் அடுத்த படம் ‘வேள்பாரி’ தான் என பிரபல இயக்குனர் ஒருவர் உறுதி செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்த ’விருமன்’ திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவின் போது ‘வேள்பாரி’ நாவலை திரைப்படமாக எடுக்க இருப்பதாக சூர்யா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ‘வேள்பாரி’ நாவலை திரைப்படமாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் சூர்யா மற்றும் யாஷ் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாகவும் இந்த படம் இதுவரை தமிழில் இல்லாத அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘வேள்பாரி’ தான் ஷங்கரின் அடுத்த படம் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உறுதி செய்துள்ளார். இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் தொடங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளதால் ஷங்கரின் படம் ‘வேள்பாரி’ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.