ரூ.100 கோடியில் இருந்து ரூ.20 கோடி: திடீரென சம்பளத்தை குறைத்த ஷங்கர் பட நடிகர்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தில் நடித்த நடிகர் திடீரென தனது சம்பளத்தை 100 கோடியில் இருந்து 80 கோடி ரூபாய் குறைத்து 20 கோடி ரூபாய் என மாற்றியிருப்பது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’2.0’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இவர் பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிகரமான நடிகராக வலம் வந்து கொண்டிருந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் தொடர் தோல்வியை பெற்று வந்தன

மிஷின் மங்கள், ஹவுஸ்புல் 4, குட் நியூஸ் உள்பட பல அக்ஷய் குமாரின் படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் 2020 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான ’லட்சுமி’ படத்திலிருந்து தோல்வி ஆரம்பித்தது. அதன்பிறகு அக்ஷய்குமார் நடித்த பெல்பாட்டம், சூரியவன்ஷி, அட்ராங்கி ரே, பச்சான் பாண்டே, சாம்ராட் பிரிதிவிராஜ் மற்றும் சமீபத்தில் வெளியான ரக்ஷாபந்தன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் ஒரு சில படங்கள் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இதுவரை ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்த அக்ஷய் குமார் தற்போது 80 கோடி ரூபாய் சம்பளத்தை குறைத்து, வெறும் 20 கோடி ரூபாய் கொடுத்தால் போதும் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தனது படம் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றால் லாபத்தின் ஒரு பகுதியை தயாரிப்பாளர் கொடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் பாலிவுட் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.