ஒரே நேரத்தில் இரண்டு படம்: இயக்குனர் ஷங்கரின் மெகா திட்டம்!

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ’இந்தியன் 2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் பாபி சிம்ஹா மற்றும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துவரும் காட்சியின் படப்பிடிப்பு ஈசிஆர் சாலையில் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஆர்சி 15’ படத்தின் படப்பிடிப்பு என்ன ஆச்சு என ராம்சரண் தேஜாவின் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இந்த நிலையில் இதனை விளக்கும் வகையில் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ மற்றும் ராம் சரண் தேஜாவின் ’ஆர்சி 15’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பும் அடுத்தடுத்து நடைபெறும் என்று இயக்குனர் ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது ’இந்தியன் 2’ படத்தில் கமலஹாசன் இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பர் முதல் வாரத்தில் மீண்டும் ’ஆர்சி 15’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும், அதனை அடுத்து கமல்ஹாசன் சென்னை திரும்பியதும் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் மீண்டும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ’இந்தியன் 2’ மற்றும் ’ஆர்சி 15’ ஆகிய இரண்டு படங்களையும் மாறி மாறி அவர் இயக்குவார் என்றும் இரண்டு படங்களையும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் அவர் முடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கரின் திரையுலக வாழ்வில் ஒரே நேரத்தில் 2 படங்களை மாறி மாறி வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.