ஆன்லைனில் படிக்க வசதி இல்ல… பெற்றோர்களே பள்ளி மாணவர்களை கூலி வேலைக்கு அனுப்பும் அவலம்!!!
- IndiaGlitz, [Thursday,September 10 2020]
கர்நாடக மாநிலத்தின் ராய்ச்சூர் பகுதியில் ஆன்லைனில் படிக்க வசதி இல்லாத காரணத்தால் பெற்றோர்களே பள்ளி மாணவர்களை கூலி வேலைக்கு அனுப்பும் அவலம் நடைபெற்று வருவதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து ராய்ச்சூர் பகுதியில் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ராய்ச்சூரின் புறநகர் பகுதிகளான சிரவாரா, காவிதாலா, தேவதுர்கா போன்ற பகுதிகளில் பெரும்பாலும் அன்றாட கூலித் தொழிலாளிகள் வசித்து வருகின்றனர்.
இத்தகைய கூலித் தொழிலாளிகளின் வீட்டில் டிவி கூட இல்லாத நிலைமை இருக்கும்போது ஸ்மார்ட்போன், இணையவசதி போன்றவற்றை நினைத்துக்கூட பார்க்க முடிவதில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது வீட்டில் சும்மா இருக்கும் குழந்தைகளை வேலைக்கு அனுப்பினால் ரூ.150 கூலிக் கிடைக்கும் என்ற ஆசையில் பெற்றோர்களே செங்கல் சூலை, தோட்ட வேலைகளுக்கு அனுப்பி விடுவதாகப் பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
குழந்தைகள் கொண்டுவரும் பணம் சொற்பமாக இருந்தாலும் அது தற்போதைய சூழலில் பெரிதும் கைக்கொடுக்கும் எனப் பெற்றோர்கள் நம்புவதாகவும் கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் ராய்ச்சூர் சுற்றியுள்ள பகுதிகளில் 130 குழந்தைகள் வேலைசெய்யும் இடங்களில் இருந்து மீட்கப் பட்டுள்ளதகாவும் தகவல் கூறப்படுகிறது. அதேபோல குழந்தைகளை வேலைக்கு அழைத்துச் சென்ற 28 வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டிருக்கின்றன.
கொரோனா தாக்கத்தால் இதுபோன்று ஏழை, கிராமப் புறங்களில் வசித்துவரும் மாணவர்களின் நிலைமை தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. மேலும் இதுபோன்ற குழந்தைகளுக்கு கல்வி என்பது எட்டாக் கனியாக மாறிவிடக்கூடாது என்று பலரும் தற்போது கவலை தெரிவித்து வருகின்றனர். அரசாங்கம் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு இதற்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.