ரஜினியின் ஆசி, விஜய்யின் விருந்து.. அட்லியின் கனிவு.. நெகிழ்ச்சி அடைந்த ஷாருக்கான்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 30 நாட்களாக சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், இந்த 30 நாட்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து ஷாருக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பிரம்மாண்டமாக உருவாகி வரும் ’ஜவான்’ திரைப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்ற நிலையில் தற்போது சென்னை படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த நிலையில் சென்னை படப்பிடிப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகர் ஷாருக்கான், ‘தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் எங்கள் செட்டை பார்வையிட்டு ஆசி வழங்கினார். மேலும் நயன்தாரா நடித்த போர்ஷனை அனிருத்துடன் இணைந்து பார்த்தார். விஜய் எங்களுக்கு சுவையான விருந்து வைத்தார். விஜய் சேதுபதியுடன் முக்கிய கலந்துரையாடினோம். இயக்குனர் அட்லி மற்றும் அவருடைய மனைவி ப்ரியா எங்களை நன்றாக கவனித்து கொண்டனர். ப்ரியா அட்லியிடம் இருந்து சிக்கன் 65 எப்படி செய்ய வேண்டும் என்பதை கற்று கொள்ள வேண்டும். மொத்தத்தில் சென்னை படப்பிடிப்பு எனக்கு இனிய அனுபவமாக இருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார். ஷாருக்கானின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

ஷாருக்கான், விஜய்சேதுபதி, நயன் தாரா, ப்ரியா மணி, யோகிபாபு உள்பட பலர் நடித்து வரும் ’ஜவான்’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.