வேகமாக பரவும் பாலியல் நோய்கள்… காரணத்தை வெளியிட்டு எச்சரிக்கும் அரசு!

  • IndiaGlitz, [Thursday,June 15 2023]

இங்கிலாந்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு பாலியல் தொற்றுநோய் பாதிப்பு அதிகரித்து இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு இருக்கும் நிலையில் மக்களிடையே கடும் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் பாலியல் தொற்றுக்கான காரணங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் இங்கிலாந்து ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி வெளியிட்ட அறிக்கையின்படி இங்கிலாந்தில் வரலாறு காணாத அளவிற்கு பாலியல் ரீதியான தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும் கடந்த ஆண்டை விட பல மடங்கு அதிகரித்து இருக்கும் நிலையில் இதற்கு முக்கிய காரணம் மக்கள் பாதுகாப்பற்ற முறையில் பாலியல் உறவு வைத்துக்கொள்வதே என்றும் கூறப்பட்டு உள்ளது.

பாதுகாப்பற்ற முறையில் பாலியல் உறவு கொள்வதால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. ஆனால் கடந்த 2022 இல் மட்டும் இங்கிலாந்தில் 82,592 நபர்களுக்கு கோனோரியா எனப்படும் பாலியல் ரீதியான தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இது கடந்த 2021 ஆண்டை விட 50% அதிகம் என்பதுதான் தற்போது பெரும் கவலையாக மாறியிருக்கிறது.

கோனோரியா பாலியல் தொற்றைத் தவிர சிபிலிஸ் எனப்படும் மேகநோய் பாதிப்பும் சமீபகாலமாக இங்கிலாந்தில் அதிகரித்து வருகிறது. அதன்படி 2022 இல் மட்டும் 8,692 பேருக்கு இந்த சிபிலிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இது 2021 –ஐ விட 15% அதிகம். மேலும் 1948 க்கு பிறகு அதிகபட்சமாக இங்கிலாந்தில் இந்த சிபிலிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக இங்கிலாந்தில் வசிக்கும் 3,92,453 பேருக்கு கடந்த ஆண்டு பாலியல் ரீதியாக பரவும் தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில் இந்த எண்ணிக்கை மற்ற ஆண்டுகளைவிட 25% அதிகம் என்பதும் மலைக்க வைக்கிறது.

இந்நிலையில் மக்கள் பாதுகாப்பற்ற முறையில் ஆணுறையை தவிர்த்துவிட்டு உடலுறவு வைத்துக் கொள்வதே முக்கிய காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உடலுறவுக்கு முன்பும் பின்பும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டு இருக்கிறது.

பொதுவாக 15-24 வயது இளைஞரிடையே அதிகமான பாலியல் தொற்று ஏற்படுவதாகக் கூறப்படும் நிலையில் இந்த கோனோரியா எல்லா வயதினரிடமும் பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சிபிலிஸ் எனப்படும் மேகநோய் திருநங்கை, திருநம்பி, பை செக்ஸுவல் அல்லது ஆணுடன் உறவு கொள்ளும் ஆண்களுக்கு ஏற்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.