கணவன் செய்தால் மட்டும் பலாத்காரம் இல்லையா? சர்ச்சையை கிளப்பும் தீர்ப்பு!
- IndiaGlitz, [Wednesday,September 08 2021]
அண்மையில் சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் “சட்டப்பூர்வமான மனைவியை அவரது கணவன் வற்புறுத்தி உடலுறவு கொள்வது சட்டப்படி பலாத்காரம் அல்ல“ என்று தீர்ப்பு அளித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்பு அலை கிளம்பி இருக்கிறது.
இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் தன்னுடைய கணவன், வலுக்கட்டாயமாக உடலுறவு கொள்கிறார். மறுப்புத் தெரிவித்தால் விளைவு வேறுமாதிரியாக இருக்கிறது எனக்கூறி பெண்கள் நீதிமன்றங்களை நாடுகின்றனர். ஆனால் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் ஒரு கணவன் பெண்ணின் விருப்பம் இல்லாமல் உடலுறவு கொள்வது தவறுதான். ஆனால் அவர் சட்டப்படி கணவன் ஆயிற்றே… சட்டப்படி தண்டிக்க இந்தியச் சட்டத்தில் தண்டனை இல்லையே? எனக்கூறி வழக்கை தட்டிக் கழித்து வருகின்றனர்.
அப்படியொரு வழக்குத்தான் சத்தீஸ்கர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அந்த மனுவில் “எனது கணவர் என்னை பலவந்தப்படுத்தியும் இயற்கைக்கு மாறாகவும் உடலுறவு கொள்கிறார்“ எனப் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியிருக்கிறார்.
ஆனால் இதற்கு விளக்கம் அளித்த நீதிபதி, “இயற்கைக்கு மாறான வழிகளில் உடலுறவு கொள்வது இந்தியத் தண்டனை சட்டப்பிரிவு 377 இன் கீழ் குற்றமே. அதேநேரம் 18 வயதுக்கு மேலுள்ள சட்டப்பூர்வமான மனைவியை வற்புறுத்தி உடலுறவு கொள்வது சட்டப்படி பலாத்காரம் அல்ல” என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்தத் தீர்ப்பை பரிசீலிக்குமாறு தற்போது பெண்கள் அமைப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சத்தீஸ்கர் மட்டுமல்ல மும்பை கூடுதல் நீதிமன்றம், கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள நீதிமன்றம் என்று இந்தியா முழுக்க இதுபோன்ற வழக்குகளில் கணவனின் கட்டாய உடலுறவுக்கு தண்டனையே வழங்கப்படுவதில்லை. இதில் தண்டனை என்பது மட்டுமல்ல, தொடர்ந்து பெண்கள் மீது ஆண்கள் அதிகாரம் செலுத்துவதற்கு சட்டமே ஒரு மிகப்பெரிய உந்துசக்தியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால்தான் தற்போது பெண்கள் அமைப்பினர் இந்தியாவில் கணவன்களால் ஏற்படும் கட்டாய வல்லுறவுக்கும் தனி தண்டனைச்சட்டம் வரையறுக்கப்பட்டு பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.