கைதிகளுக்கும் மனைவியுடன் உறவு கொள்ள உரிமை: ஆயுள் கைதிக்கு 2 வாரம் விடுமுறை அளித்த நீதிமன்றம்
- IndiaGlitz, [Thursday,January 25 2018]
கைதிகள் என்று முத்திரை குத்தப்பட்டாலும் அவர்களும் மனிதர்களே! சிறைக்கு செல்பவர்கள் திருந்தி நல்ல மனிதர்களாக வெளியேற வேண்டும் என்பதே சிறைகள் அமைக்கப்பட்டதன் நோக்கம். அவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் குடும்பத்தினர்களை சந்திக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் வழக்கு ஒன்றில் கருத்து கூறியுள்ளது.
நெல்லையை சேர்ந்த சித்திக் அலி என்பவர் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளார். அவருடைய 32 வயது மனைவி மெஹ்ராஜ் என்பவர் தான் கருத்தரிப்பு சிகிச்சை பெற்றுள்ளதாகவும், தற்போது கணவர் துணை இருந்தால் தான் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், எனவே அவருக்கு 60 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் மனுதாக்கல் செய்தார்
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து முடிவெடுக்க சிறைத்துறையினர்களுக்கு உத்தரவிட்டது. ஆனால் சிறைத்துறையினர் கைதியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்க மறுப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'கைதியின் மனைவி இத்தனை வருடங்களாக குழந்தை இல்லாமல் தற்போதுதான் கருத்தரிப்பு சிகிச்சை செய்துள்ளார். அவர் குழந்தை பெற்று கொள்ள விரும்புவது அவரது உரிமை. மேலும் கைதிகளுக்கு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தங்கள் குடும்பத்தினர்களையும் சமூகத்தையும் பார்க்க அனுமதிப்பது அவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். எனவே மனுதாரரின் கணவருக்கு 2 வாரங்கள் விடுமுறை அளிப்பதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.