இந்தியச் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 3 வயது சிறுமி!
- IndiaGlitz, [Thursday,November 05 2020]
22 இந்திய மொழிகளின் பெயர்களை குறைந்த வேகத்தில் உச்சரித்து 3 வயது சிறுமி, மத்திய அரசின் இந்தியச் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார். திருப்பூர் மாவட்டம் சோவூர் அடுத்த லூர்துபுரத்தில் வசித்து வரும் ரவி-பெய்சில் தம்பதியினரின் 3 வயது சிறுமி ஆண்டோனா சோலிக். இந்தக் குழந்தை 22 இந்திய மொழிகளின் பெயர்களையும் வெறுமனே 9 வினாடிகளில் உச்சரித்து இந்தியச் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளார்.
இதனால் அக்குழந்தைக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அவளுடைய 11/2 வயதிலேயே எல்லா வார்த்தைகளையும் மிகச் சரியாக உச்சரிப்பாள் என அவளுடைய பெற்றோர்கள் பெருமை தெரிவித்து உள்ளனர். மேலும் மிகக் கூர்மையாக கவனிக்கும் திறமையும் அவளிடம் இருந்ததாம்.
இதையடுத்து அவளுடைய பெற்றோர் மிகக் குறைந்த வயதிலேயே தமிழ் எழுத்துக்கள், மாநிலங்களின் பெயர்கள், அவற்றின் தலைநகர், கண்டங்களின் தலைநகர் போன்றவற்றை சொல்லிக் கொடுத்து உள்ளனர். இதைக் கேட்ட அக்குழந்தை மிகச்சரியாக கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வருகிறது. ஒருகட்டத்தில் எப்படியாவது சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என நினைத்த பெற்றோர் வெறுமனே 3 நாட்களில் 22 மொழிகளின் பெயர்களை அதுவும் மிக வேகமாக உச்சரிக்குமாறு சொல்லிக் கொடுத்து உள்ளனர். இந்நிலையில் 22 மொழிகளின் பெயர்களை வெறுமனே 9 வினாடிகளில் சொல்லி தற்போது சிறுமி இந்தியச் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.