7 மாதத்தில் பாஜகவை விட்டு விலகிய பிரபல நடிகை… காரணம் இதுதான்…

பெங்கால் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்துவரும் ஸ்ரபந்தி சாட்டர்ஜி பாஜகவில் இருந்து விலகிக்கொள்வதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மேற்கு வங்க சட்டச்சபைத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்ட இவர் திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருப்பது கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெங்கால் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த ஸ்ரபந்தி சாட்டர்ஜி கடந்த மார்ச் மாதம் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்காக தீவிரம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் ஒரு தொகுதியில் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். தேர்தலில் இவர் தோல்வியை தழுவிய நிலையில் தொடர்ந்து பாஜகவிற்கு ஆதரவான செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இந்நிலையில் தற்போது பாஜகவில் இருந்து விலகிக்கொள்வதாகத் திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருப்பது அரசியல் மட்டத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பாஜகவுடன் அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்கிறேன். கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்காக உழைத்தேன். ஆனால் மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்காக பாஜக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் இனி எனக்கும் பாஜகவுக்கும் எந்த உறவுமில்லை என்று டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர்கள் அக்கட்சியை விட்டு திரிணாமுல் காங்கிரஸில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் அம்மாநில துணைத்தலைவர் முகுல் ராயும் பாஜகவில் இருந்து விலகினார். தற்போது நடிகை ஸ்ரபந்தி சாட்டர்ஜி விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.