நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்ட ஹைதி அதிபர்… திடுக்கிடும் பின்னணி!
- IndiaGlitz, [Friday,July 09 2021]
கரீபியன் கடல் பகுதியில் உள்ள தீவு நாடான ஹைதியின் அதிபர் ஜோவெனல் மாய்சே நேற்றுமுன்தினம் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இதனால் அந்நாட்டில் தற்போது அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.
தீவு நாடான ஹைதி அதிபர் படுகொலை தொடர்பாக பல உலகத் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த படுகொலைக்கு பின்னால் வெளிநாட்டவர்களின் சதித்திட்டம் இருப்பதாக அந்நாட்டு போலீஸ் தகவல் தெரிவித்து உள்ளது.
போர்ட்டா பிரின்ஸ் நகரில் வசித்துவந்த அதிபர் ஜோவெனல் மாய்சேவை நேற்றுமுன்தினம் இரவு, சில அடையாளம் தெரியாத கும்பல் ஆயுதம் ஏந்திவந்து சுட்டு வீழ்த்தி இருக்கிறது. இந்தக் கொலைக்குப் பின்னால் கொலம்பியாவை சேர்ந்த ஒய்வு பெற்ற ராணுவ வீரர்கள் 26 பேரும் இரண்டு அமெரிக்கர்களும் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதனால் ஹைதி நாட்டில் தற்போது அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். மேலும் அதிபரின் கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்தும் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.