மெரீனாவில் திடீரென மூடப்பட்ட சர்வீஸ் சாலை: நடைப்பயிற்சி செல்வோர் அதிர்ச்சி
- IndiaGlitz, [Sunday,April 01 2018]
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசு மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ள நிலையில் எந்த நேரத்திலும் மீண்டுமொரு மெரீனா போராட்டம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. அதன் ஆரம்பம் போல் நேற்று மக்களோடு மக்களாக ஊடுருவிய போராட்டக்காரர்கள் மெரீனாவில் திடீரென போராட்டம் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறை மெரீனாவில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக மெரீனாவில் சர்வீஸ் சாலை மூடப்பட்டுள்ளது. சர்வீஸ் சாலையில் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர். காலையில் நடைப்பயிற்சியில் ஈடுபடுவர்களுக்கு எந்தவித தடையும் இல்லை என்று காவல்துறை அறிவித்திருந்தாலும் இன்று காலை நடைப்பயிற்சி சென்ற ஒருசிலர் நபர்களை போலீசார் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதன்காரணமாக சென்னை மெரீனாவில் அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு போலவே காவல்துறையினர் நடந்து கொள்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அவர்களின் அழைப்பின் பேரில் தலைமைச் செயலாளர் , தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆகியோர் இன்று சந்திக்க உள்ளனர் காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை பற்றி கேட்டறிய வாய்ப்பிருப்பதாகவும், தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்துள்ளது பற்றியும் கேட்டறியலாம் என்றும் கூறப்படுகிறது.