சந்தானம் நடித்த 'சர்வர் சுந்தரம்' ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Saturday,June 03 2017]

காமெடி நடிகரில் இருந்து ஹீரோவாக பதவி உயர்வு பெற்ற சந்தானம் 'தில்லுக்கு துட்டு', 'இனிமே இப்படித்தான்' போன்ற படங்களை அடுத்து தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'சர்வர் சுந்தரம். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது சென்சாருக்கும் அனுப்பியாகிவிட்டது. எனவே இந்த படம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஆனந்த் பால்கி இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி ஒன்றில் கூறியிருப்பதாவது: "சர்வர் சுந்தரம்' படத்தை சென்சாருக்கு அனுப்பியிருக்கிறோம், ஜுன் மாத இறுதியில், ரம்ஜான் பண்டிகையை ஒட்டி எங்கள் படம் ரிலீஸ் ஆகும் என உறுதியாக நம்புகிறேன். பண்டிகை சூழல் எங்கள் படத்துக்கு பொருத்தமானது, கதையும் அதற்கேற்ற வகையில் இருக்கும், ரசிகர்களுக்கு நிச்சயம் தீனி போடும் இந்த சர்வர் சுந்தரம். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். மொழி எல்லைகளை கடந்து சந்தானத்தின் மார்க்கெட் விரிவடைந்திருப்பதையே இது காட்டுகிறது" என கூறியுள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் குறைந்த காலத்திலேயே 1 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியதே இந்த படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு சான்றாக உள்ளது. சந்தானத்தின் கேரியரில் மிகப்பெரிய படமாக அமைந்துள்ள இந்த படம் பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு இணையாக ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படம் வெற்றி பெற்றால் சந்தானத்திற்கு தெலுங்கு மாநிலங்களிலும் மார்க்கெட் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சந்தானம், வைபவி, நாகேஷ் பேரன் பிஜேஷ், ராதாரவி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் தயாரித்துள்ளது.