கமலை அநாகரிகமாக பேசிய செந்தில் பாலாஜி..! வலுக்கும் எதிர்ப்புகள்...!
- IndiaGlitz, [Thursday,March 18 2021]
திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் குறித்து அவதூறாக பேசிய கருத்துக்கள் தமிழக அரசியல் மற்றும் மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நடக்கவிருப்பதால் ஒவ்வொரு கட்சியும், தங்கள் கட்சியில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தை மிகவும் முனைப்போடு செய்து வருகின்றனர். பிரச்சார சமயங்களில் அனைத்து கட்சிகளும் பிற கட்சிகளின் இயலாமை, ஆட்சி அமைப்பு குறித்து சுட்டிக்காட்டி பேசுவது இயல்பான ஒன்றே.
முதன்முறை இச்சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் மக்கள் நீதி மய்யம் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் இந்நேரத்தில் திராவிடக்கட்சிகளுக்கும், மநீம தலைவர் கமல்ஹாசனுக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதங்கள் நடந்துவருகிறது என்றே சொல்லலாம்.
எம்எல்ஏ செந்தில் பாலாஜி பேசியது -
“கரூரில் மாட்டுவண்டி மூலம் மணல் எடுக்க அனுமதி தருவதோடு, அதற்கு ஏற்படும் தடைகளும் அகற்றப்படும். மேலும் இச்செயலுக்கு தடையாக இருக்கும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள்” என கரூர் திமுக வேட்பாளர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி தனது பிரச்சாரத்தின் போது பேசினார்.
கமல் டுவிட்டரில் பதிலடி -
தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவங்கி விடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி. எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர்,அதன் காரணமாக கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான பின்னும் அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர். இதுதான் கழகங்களுக்கும் மநீமவிற்கும் உள்ள வித்தியாசம்என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடும் பதிலடி கொடுத்திருந்தார்.
அநாகரிக பேச்சு:
மாட்டு வண்டி மணல் வியாபாரத்தை நம்பி சுமார் 15,000 குடும்பங்கள் உள்ளன. தஞ்சை மற்றும் திருச்சியில் மட்டுமே இதற்கு அனுமதி உள்ளது. ஆனால் கரூரில் இல்லை.இவர்களின் வியாபாரத்தை கமல்ஹாசன் தடுக்க நினைக்கிறார். கமல் பேசுவது அரைவேக்காட்டுத்தனமாக உள்ளது, அவருக்கு தைரியம் இருந்தால் நேரடியாக வந்து பேச வேண்டும் என செந்தில் பாலாஜி, அநாகரிகமாக பேசியிருந்தார்.
இவர் கூறிய சில விஷயங்களில் நியாயம் இருந்தாலும், பயன்படுத்திய வார்த்தைகள் தவறானவை என சமூக வலைத்தளங்களில் இவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. செந்தில்பாலாஜி நாவடக்கத்துடன் பேச வேண்டும்.தனிநபரை தாக்கியதுபோல் அவதூறாக பேசக்கூடாது என பலரும் இவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.