டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கம் வென்ற வீராங்கனை? மலைக்க வைக்கும் ஆச்சர்யம்!

2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தற்போது ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஒரு பதக்கத்தை வெல்வதற்கே வீரர்கள் பலரும் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீராங்கனை ஒருவர் 7 பதக்கங்களை வென்று பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நீச்சல் வீராங்கனையான எம்மா மெக்கியோன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இதுவரை 7 பதக்கங்களை வென்று உலகச் சாதனை படைத்துள்ளார். இவர் 50 மீ ஃப்ரீ ஸ்டைல், 100 மீ ஃப்ரீ ஸ்டைல், 4×100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் ரிலே, 4×100 மீ மிட்லே ரிலே என நான்கு போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

100 மீ பட்டர்ஃப்ளை, 4×200 மீ ஃப்ரீ ஸ்டைல் ரிலே, கலப்பு 4×100 மீ ரிலே ஆகிய பிரிவுகளில் வெண்கலம் வென்றுள்ளார். இதனால் ஒரே ஒலிம்பிக் போட்டியில் 7 பதக்கங்களை வென்று எம்மா உலகச் சாதனைப் படைத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியா இதுவரை 14 தங்கத்தை வென்றுள்ளது. இதில் 4 தங்கம் எம்மாவுடையது என்பதும் பெரும் மலைப்பாக பார்க்கப்படுகிறது.

இதைத்தவிர உலகிலேயே ஒரே ஒலிம்பிக் போட்டியில் 50மீ மற்றும் 100மீ ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டிகள் என இரண்டிலும் தங்கம் வென்ற 4 ஆவது பெண்மணி என்ற பெருமையும் இவருக்கு கிடைத்து இருக்கிறது.

2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் 4 தங்கம், 3 வெண்கலத்தைத் தவிர கடந்த 2016 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் ஒலிம்பிக் போட்டியில் மட்டும் இவர் 11 பதக்கங்களை பெற்றுள்ளார்.

இதைத்தவிர 50மீ ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் 23.81 நொடிகள், 100 மீ ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் 51.96 நொடிகள் என இதுவரை நடக்காத உலகச் சாதனையை தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் எம்மா செய்து இருப்பது ரசிகர்களிடைய பெரும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.