லம்பாடி இனத்தில் இருந்து முதல் பெண் மருத்துவர்… குவியும் பாராட்டு!!!
- IndiaGlitz, [Monday,November 23 2020]
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மருத்துவப் படிப்பு மிகவும் போற்றத்தக்க ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் மருத்துவம் பயில வேண்டும் என்றால் நீட் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த விதிமுறைகள் அரசு பள்ளி மாணவர்களைப் பாதித்து விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு என தனி இடஒதுக்கீடு முறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்து வரும் லம்பாடி இனத்தைச் சேர்ந்த ஏழை குடும்பத்து மாணவி ஒருவர் தற்போது மருத்துவம் பயில வாய்ப்பு பெற்றிருக்கிறார். அவர்தான் அந்த இனத்தில் முதல் பெண் மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள பி.எல்.தண்டா எனும் கிராமத்தில் வசித்து வரும் கூலித் தொழிலாளிகள் மண்ணு-ராதா தம்பதி. இவர்களின் மகள் சௌமியா.
இவர் அருகில் உள்ள பொரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் தனது 12 ஆம் வகுப்பை முடித்து உள்ளார். இவருக்கு படிப்பின் மீது தீராத காதலும் மருத்துவத்தின் மீது ஆர்வமும் இருந்திருக்கிறது. இதைத் தெரிந்து கொண்ட அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், சௌமியாவிற்கு நீட் தேர்வில் வெற்றிபெற தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சௌமியா தனது கடின உழைப்பால் நீட் தேர்வில் 184 இடத்தைப் பிடித்தார்.
நீட்தேர்வில் வெற்றி பெற்ற இவருக்கு தமிழக அரசின் 7.5% உள்இட ஒதுக்கீட்டு வசதியைக் கொண்டு தற்போது கோவை மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் படிக்க இடம் கிடைத்து உள்ளது. இதனால் திருவண்ணாமலை பகுதியில் வசித்து வரும் லம்பாடி இனத்தைச் சேர்ந்த அனைவரும் தற்போது மகிழ்ச்சியில் தத்தளித்து வருவதாகக் கூறப்படுகிறது. மாணவி சௌமியா தனது கடின உழைப்பால் அந்த இனத்தின் முதல் பெண் மருத்துவராக உயரப்போகிறார்.