Semma Botha Aagathey Review
செம போத ஆகாதே: செம கலகலப்பு
அதர்வா முரளி நடித்து முதன்முதலில் தயாரித்துள்ள திரைப்படம் 'செம போத ஆகாதே'. ஒருசில படங்கள் போன்றே இந்த படமும் பல ரிலீஸ் தேதிகளுக்கு பின் இன்று வெளியாகியுள்ளது. ஒருசில ஹீரோக்கள் மட்டுமே தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அதர்வாவின் இந்த படம் ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வெற்றியை தருமா? என்பதை பார்ப்போம்
சென்னையில் தனி பிளாட்டில் குடியிருக்கும் அதர்வா, நண்பர் கருணாகரனுடன் ஒருநாள் போதையில் இருக்கும்போது தான் திருமணத்திற்கு முன் ஒரு பெண்ணை அனுபவிக்க வேண்டும் என்று கூறுகிறார். உடனே கருணாகரன் தனக்கு தெரிந்த விலைமாது ஒருவரை போனில் கூப்பிட்டு அதர்வா வீட்டுக்கு செல்லுமாறு அனுப்புகிறார். அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்க ஆரம்பிக்கும் நேரம் பக்கத்து வீட்டு தேவதர்ஷினி தனது மாமனாருக்கு ஹார்ட் அட்டாக் என்றும் மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்யுமாறு கூறுகிறார். எனவே விலைமாதுவை தனது வீட்டிலேயே வைத்து பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு செல்கிறார் அதர்வா. பின்னர் திரும்பி வந்து பார்க்கும்போது அந்த விலைமாது பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த பெண் யார்? அவரை கொலை செய்தது யார்? அதர்வா கொலைகாரனை கண்டுபிடித்தாரா? அந்த பெண்ணின் பின்னணியில் யார் யார் இருக்கின்றார்கள்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை
விலைமாது பெண்ணிடம் 'முதல்முறை' என்று கூறி நெளிவதில் தொடங்கி, கருணாகரனுடன் காமெடி, வில்லன்களுடன் மோதல், காதலியிடம் கெஞ்சல் என அதர்வாவின் நடிப்பில் இன்னொரு பரிணாமம் தெரிகிறது. ரொமான்ஸ், காமெடி மற்றும் ஆக்சன் மூன்றிலும் கலக்கியுள்ளார் அதர்வா
நாயகி மிஷ்திக்கு அவ்வப்பொது வந்துபோகும் சிறிய கேரக்டர்தான் என்றாலும் ரசிக்கும்படி நடித்துள்ளார். கிடைத்த சில நிமிட காட்சிகளில் ரொமான்ஸ், காமெடி மற்றும் கவர்ச்சி என ஸ்கோர் செய்துள்ளார்.
கருணாகரனை இந்த படத்தின் இன்னொரு ஹீரோ என்று கூட சொல்லலாம். பிணத்துடன் ஒருநாள் முழுவதும் படுக்கும் காட்சியில் தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கின்றது. ஹவுஸ் சர்ஜன்னா ஹவுஸ்ல தான இருக்கணும், கார்பெண்டர்ன்னா கார்லதான போகணும் போன்ற கடி காமெடிகள் இருந்தாலும் அவர் கொடுக்கும் டைமிங் கவுண்ட்டர்கள் ரசிக்கும்படி உள்ளது.
அனைகா சோட்டிக்கு முதல் பத்து நிமிடம் தவிர மீதி நேரம் முழுவதும் பிணமாக நடிக்கும் வேடம் தான். ஆனாலும் அந்த பத்து நிமிடத்தில் அவர் செய்யும் காமெடியும் கவர்ச்சியும் இளசுகளுக்கு விருந்து
மேலும் ஜான்விஜய்யின் கோமாளித்தனமான வில்லன் நடிப்பு, எம்.எஸ்.பாஸ்கரின் சபல நடிப்பு, மனோபாலாவின் காமெடி மற்றும் அர்ஜை என இந்த படத்தின் சப்போர்ட்டிங் கேரக்டர்களின் ஒத்துழைப்பு அபாரம். குறிப்பாக தேவதர்ஷினி இரண்டே காட்சிகளில் வந்தாலும் காமெடியில் தூள் கிளப்பியுள்ளார்.
யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் 'செம போத ஆகாதே' பாடல் சூப்பர். மற்ற பாடல்களும் ஓகே. பின்னணி இசையில் வெளுத்து வாங்கியுள்ளார் இளம் இசைஞானி
கோபி அமர்நாத்தின் ஒளீப்பதிவில் கேரள காட்சிகள் கண்ணுக்கு குளிமை. எடிட்டர் பிரவீண் எடிட்டிங் கச்சிதம்.
இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் ஒரு ஒன்லைன் கதையை விறுவிறுப்பாகவும் ரசிக்கும் வகையிலும் திரைக்கதை அமைத்ததில் இருந்தே பாதி வெற்றி பெற்றுவிட்டார். ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு டுவிஸ்ட், படம் முழுக்க சீரியஸ் மற்றும் காமெடியை ஒரே விகிதத்தில் கலந்தது, ஒருசில இடங்களில் இரட்டை அர்த்த வசனம் என அனைத்து தரப்பினர்களையும் கவரும் வகையில் திரைக்கதையை தொய்வில்லாமல் நகர்த்தியுள்ளார். ஒரு விலைமாதுவின் மரணத்திற்கு பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றதா? என ஒவ்வொரு முடிச்சையும் இயக்குனர் அவிழ்க்கும்போது ஆச்சரியம் ஏற்படுகிறது. நான்கு நாட்களுக்கு மேல் ஆகியும் அனைகா சோட்டியின் பிணம் ஃபிரஷ்ஷாகவே இருப்பது உள்பட ஒருசில லாஜிக் மீறல் இருந்தாலும், காமெடி படத்தில் லாஜிக் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பது கோலிவுட்டின் எழுதப்படாத விதி.
மொத்தத்தில் விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் ஒரு ஜாலியான படம் பார்க்க விருப்பமுள்ளவர்கள் இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்
- Read in English