என்னங்க இவ்வளவு காய்ஞ்சு போயா இருக்கீங்க.. சமீபத்திய சர்ச்சை குறித்து இயக்குனர் செல்வராகவன்..!
- IndiaGlitz, [Tuesday,September 10 2024]
சமீபத்தில் சென்னையில் உள்ள அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் மாணவிகள் மத்தியில் பேசியது பெரும் சர்ச்சை ஆகி உள்ள நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
யாரோ ஒருத்தர் எதையோ உளறிக்கொண்டு நான் தான் குரு என்று கூறி, கண்டதெல்லாம் பேசினால், உடனே நீங்களும் அவர் முன் உட்கார்ந்து, கண்ணை மூடி கொள்வீர்களா? உண்மையான குரு என்பது நீங்கள் தேடி போக வேண்டிய அவசியம் இல்லை, அவரே உங்களை தேடி வருவார். இதெல்லாம் தானாக நடக்கும்.
டிவியில் விளம்பரம் செய்து, மைக்கு வைத்துக் கொண்டு, நான் உங்களுக்கு தியானம் சொல்லித் தருகிறேன் என்று சொல்பவரை நம்ப வேண்டாம். முக்கியமான விஷயம் என்னவென்றால் உண்மையான குரு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவே மாட்டார். தியானம் பண்றதுக்கு இவ்வளவு காஞ்சு போயா இருக்கின்றீர்கள்?
முதலில் உங்களிடம் நான் ஒன்று சொல்கிறேன், தியானம் என்பது உலகத்திலேயே மிகவும் எளிமையான விஷயம். உலகத்தில் உள்ள எல்லா மதங்களும் போதிக்கிறது கடவுள் உங்களில் இருக்கிறார் என்பதுதான். உலகத்தில் மிக எளிமையான விஷயம் தியானம் செய்வது தான்.
புத்தருடைய டெக்னிக் தான் தியானம் செய்வதற்கு மிகவும் எளிதானது. காற்று போகும் நாசியில் உங்கள் நினைப்பை வையுங்கள். மூச்சு விடுவதோ, மூச்சு வெளியேறுவது பற்றியே நீங்கள் கவலைப்பட வேண்டாம். அது தன்னால் நடக்கும். நடுவில் வேறு ஏதாவது நினைப்பு வந்தால் அதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டாம். அது பாட்டுக்கு வரும், கொஞ்ச நேரம் இருக்கும், அதுவே போய்விடும். அப்புறம் மனதை நீங்கள் திரும்பவும் நாசி பகுதிக்கு உங்கள் நினைவை கொண்டு வந்து விடுங்கள். இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும், காலங்கள் போக போக தன்னால் மற்ற நினைவுகள் எல்லாம் நிற்க ஆரம்பித்து விடும். இவ்வளவுதான் தியானம். புத்தர் இதைத்தான் சொல்கிறார்.
தியானம் என்பது நீச்சல் போன்றது தான், தண்ணீருக்குள் குதித்து நீந்தி கொண்டே இருந்தால் ஒருநாள் தானாகவே நீச்சல் வந்துவிடும். அதே மாதிரி தான் தியானமும். தியானம் செய்யச் செய்ய தானாகவே அது நமக்கு வழக்கத்துக்கு வந்துவிடும். இதில் ஏதாவது மாற்றுக் கருத்து இருந்தால் யாராவது என்னிடம் சொல்லுங்கள், நான் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன், இதற்கு மாற்று கருத்தே கிடையாது’ என்று இயக்குனர் செல்வராகவன் தெரிவித்திருந்தார்.