தமிழ்நாட்டு மக்களிடம் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்: செல்வராகவன் வைரல் வீடியோ..
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். சற்று முன்னர், தமிழ்நாட்டு மக்களிடம் “கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்” என ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:
தமிழ் இனி மெல்ல சாகும் என பாரதியார் கூறியிருந்தார். அது எவ்வளவு உண்மை என்றால், தமிழ் ஏற்கனவே தீவிர சிகிச்சை பிரிவில், வெண்டிலேட்டரில் படுத்து இருக்கிறது. எங்கே பார்த்தாலும் ஆங்கிலம், ஆங்கிலம், ஆங்கிலம் என்று தான் உள்ளது. ஆங்கிலம் தெரியாதவர்களும் கூட திக்கி திணறி ஆங்கிலத்தில் பேச முயற்சி செய்கின்றனர். தமிழில் பேசுவதை அவமானமாக, அருவருப்பாக நினைக்கின்றார்கள். எனக்கு ஆங்கிலத்தில் பேசுவதற்கு என்ன அவசியம் என்பதை சத்தியமாக புரியவில்லை.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலம் தெரியாமல் நான் எவ்வளவு அவமானப்பட்டேன் என்று எனக்கு நன்றாக தெரியும். இதற்காக நான் நிறைய நாட்கள் அழுதேன். ஆங்கிலம் தெரியாமல் நான் திணறினேன். கல்லூரியில், எல்லோரும் ஆங்கிலம் நன்றாக பேசுவார்கள். அப்படியே வெட்கப்பட்டு வளர்ந்திருக்கிறோம்.
அப்புறம்தான் எனக்கு ஒரு வெறி வந்தது. ஹிந்து எக்ஸ்பிரஸ் பத்திரிகை, ஆங்கிலப் புத்தகங்களை படிக்கத் தொடங்கினேன். அர்த்தம் தெரியவில்லை என்றால் பக்கத்திலேயே ஒரு அகராதி வைத்துக்கொண்டு அதை பார்த்து, படித்தேன். ஒரு கட்டத்தில், ஓரளவுக்கு ஆங்கிலத்தில் நன்றாக பேச ஆரம்பித்துவிட்டேன். சினிமாவுக்கு வந்தபிறகு இன்னும் ஆங்கிலத்தை நன்றாக பேச ஆரம்பித்தேன். ஆனாலும் நான் தமிழன்; எங்கே போனாலும் தமிழில்தான் பேசுவேன்.
நான் உங்களிடம் கெஞ்சி கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். நீங்கள் தமிழில் பேசுங்கள். எங்கே போனாலும், தலை நிமிர்ந்து, தமிழில் நன்றாக, சத்தமாகப் பேசுங்கள். யாராவது, நீங்கள் தமிழில் பேசுவதை அவமானமாகப் பார்த்தால், அவர்களை ஒரு முறை கேள்வி கேளுங்கள். நீங்கள் தமிழ் பேசுவதை ஒரு பிகர் என அவமானமாக பார்த்தால் அப்படிப்பட்ட பிகர் நமக்குத் தேவையில்லை என தூக்கிக் கட்டி வீசுங்கள் என்பதுதான் எனது கருத்து.
ஏன் சொல்கிறேன் என்றால், உலகின் எந்த நாட்டிற்கு சென்றாலும், அந்நாட்டு மக்கள் அவரவர் தாய்மொழியில் தான் பேசுவார்கள். ஆங்கிலத்தில் வேண்டுமெனில் சப்டைட்டில் மட்டும் தருவார்கள்.
உலகில் எல்லா வெளிநாட்டு மக்களும், இங்கே வந்து அழகாக தமிழ் கற்றுக் கொண்டு தமிழில் பேசுகிறார்கள். ஏன்? உலகிலேயே பழமையான மொழி தமிழ்தான்! எனவே தமிழில் பேசுங்கள். இது காலம் காலமாக என் மனதில் இருந்த ஒரு விஷயம். அதை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்’ என்று இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments