Selfie Review
செல்ஃபி - கல்வி மாஃபியாவை தோலுறித்து காட்டும் விறுவிறுப்பான படம்
வெற்றிமாறனின் உதவியாளரும் நெருங்கிய உறவினருமான மதிமாறனின் அறிமுகப் படமாகவும், கல்வி மாஃபியாவைக் கையாளும் முக்கியப் படமாகவும் 'செல்ஃபி' அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. இப்படம் பரபரப்பை நியாயப்படுத்துகிறதா என்ற கேள்விக்கு, ஆம் என்பதே பதில்.
கனல் (ஜி.வி. பிரகாஷ் குமார்) ஒரு கிராமப்புறத்தைச் சேர்ந்தவர், அவர் சென்னை கல்லூரியில் பொறியியல் படித்து, வேகமான பகட்டு வாழ்க்கையை விரும்புகிறார். அதிக கேபிடேஷன் கட்டணத்தைச் செலுத்தி, தன் தந்தை ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொள்ளும் அவன் அதைத் திரும்பப் பெறுவதற்காக நிர்வாகத்துடன் சண்டை போட்டு தோல்வி அடைகிறான். கல்லூரி சீட்களுக்கு பொய்யான பற்றாக்குறையை உருவாக்கி, சிறு நகர் மற்றும் கிராமப்புற மாணவர்களின் பெற்றோரை ஏமாற்றி பெரும் பணம் சம்பாதிக்கும் ஒரு மாஃபியா இருப்பதை கனல் உணருகிறான். பின்னர் அவன் தனது நண்பன் நசீர் (டி.ஜி. குணாநிதி) மற்றும் பிற நண்பர்களின் உதவியுடன் தாங்களே அந்த தொழிலில் குதித்து பணம் சம்பாதிக்க தொடங்குகிறார்கள். ஒரு பெரிய பல்கலைக்கழகத்தின் தலைவருக்கு நெருக்கமான கல்லூரி சீட் மாஃபியா தலைவன் ரவிவர்மாவுடன் (கௌதம் வாசுதேவ் மேனன்) நேரடியாக மோத நேரிடுகிறது . அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் அந்த வாலிபர்களின் வாழ்க்கைகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது, அடுத்து என்ன நடக்கிறது என்பதை அழுத்தமான திரைக்கதையில் சொல்கிறது இந்த செல்பி .
ஜி.வி. பிரகாஷ் மீண்டும் எதிர்மறையான கதாபாத்திரத்தில் மிகவும் அழுத்தமான நடிப்பை வழங்கியுள்ளார். அவர் ஏமாற்றும் போது வேகமும் அதே சமயம் தன் தந்தைஉடன் முரண் மற்றும் நஸீரின் தாயுடன் பாசம் என அணைத்து விதமான எமோஷன்களிலும் ஸ்கோர் செய்கிறார். வர்ஷா பொல்லம்மாவுடனான அவரது காதல் காட்சிகளும் இயல்பானவை மற்றும் எந்த வகையிலும் திரைக்கதைக்கு இடையூறாக இல்லை. நசீராக நடித்திருக்கும் படத்தின் தயாரிப்பாளர் டி ஜி குணாநிதி அறிமுக படத்திலேயே அசத்தியிருக்கிறார். குறிப்பாக அவர் விரக்தியில் விபரீத முடிவு எடுக்கும் பொது பண்பட்ட நடிப்பை தந்திருக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனனின் நடிப்பு வாழ்க்கையில் மிகச் சிறந்த கதாபாத்திரம் இந்த ரவிவர்மாதான் என்று சொன்னால் மிகையாகாது. அதிகம் அலட்டிக்கொள்ளாமல் தன் உடல்மொழிமூலமே ஒரு கொடூர குணம் கொண்ட மாஃபியா தலைவனாகவும் அதே சமயம் தன் மனைவி மற்றும் குழந்தைகளை நேசிக்கும் குடும்பத்தலைவனாகவும் ஜொலிக்கிறார். சங்கிலி முருகன், வாகை சந்திரசேகர், சுப்ரமணியம் சிவா மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் தங்கள் அனுபவ நடிப்புத்திறன்களை திரையில் கொண்டு வருகிறார்கள், வித்யா பிரதீப் GVM இன் மனைவியாக அவரது தீய வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் கேரக்டரில் ஈர்க்கிறார். மற்ற நடிகர்கள் அனைவரும் பாத்திரங்களுக்கேற்ப பொருத்தமான தேர்வுகள்.
பெற்றோரின் அறியாமையை உபயோகித்து பல நூறு கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடிக்கும் கல்வி மாஃபியாக்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை ஆழமாக காட்டுவதில் படம் பெரிதாக ஜெயிக்கிறது. திகிலூட்டும் சம்பவங்களை அருகில் இருந்து பார்க்கும் உணர்வைத் தந்திருக்கிறது தத்ரூபமான திரைக்கதையும் இயல்பான நடிப்பும். GVP மற்றும் வட இந்திய சிறுவர்கள் மோதும் சண்டையும் கிளைமாக்சில் GVM மற்றும் அவரது எதிரிகளுக்கு இடையேயான சண்டையம் குலை நடுங்க வைக்கின்றன. சண்டை பயிற்சிலருக்கு ஒரு சபாஷ்.
இடைவேளைக்கு பின் கொஞ்ச நேரம் திரைப்படம் திசை மாறி ஒரு சாதாரண பழிவாங்கும் கதையாக மாறும்போது கொஞ்சம் சறுக்குகிறது. ஒடடமும் தொய்வடைகிறது. ஒரு சுயநல இளைஞராக இருக்கும் கி வி பிரகாஷ் திடீரென நல்ல பிள்ளையாக மாறுவது ஓடிட மறுக்கிறது.
விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு மற்றும் எஸ்.எளையராஜாவின் எடிட்டிங்கும் ஜிவிபியின் பின்னணி இசையும் படத்தை உயர்தரத்திற்கு உயர்த்துகிறது. மதிமாறன் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஒரு நேர்மையான திரைப்படத்தை விறுவிறுப்பாக தந்திருக்கிறார். அவர் குருநாதருக்கு முதல் படத்திலேயே பெருமை சேர்த்திருக்கிறார். டி ஜி பிலிம் கொம்பனியுடன் கைகோர்த்து மீண்டும் ஒரு நல்ல சினிமாவை கலைப்புலி எஸ் தாணு தமிழ் ரசிகர்களுக்கு படைத்திருக்கிறார்.
தீர்ப்பு: மொத்தத்தில் செல்பி கல்வி மாஃபியாவின் கொடூரங்களை தோலுரித்து காட்டும் ஒரு விறுவிறுப்பான படம். கண்டிப்பாக தியேட்டரில் கண்டு ரசிக்கலாம்.
- Read in English