இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி: 2 வரிகளில் பயோடேட்டா அனுப்பிய சேவாக்
- IndiaGlitz, [Tuesday,June 06 2017]
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து புதிய பயிற்சியாளர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த பதவிக்கு தற்போதைய பயிற்சியாளர் கும்ப்ளே, சேவாக் உள்பட உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் பலர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த பதவிக்கு விண்ணப்பித்த அனைவரும் தங்களுடைய முழு பயோடேட்டாவை அனுப்பியிருந்த நிலையில் சேவாக் மட்டும் இரண்டே இரண்டு வரிகளில் தனது பயோடேட்டாவை அவருடைய ஸ்டைலில் அனுப்பியிருந்தார். அந்த இரண்டு வரிகள் இவைதான்: ‛ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகராகவும் பயிற்சியாளராகவும் பணியாற்றி இருக்கிறேன். தற்போது இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களுடனும் விளையாடிய அனுபவம் எனக்கு உண்டு' என்று குறிப்பிட்டிருந்தார்
சேவாக்கின் இந்த இரண்டு வரி பயோடேட்டாவை பிசிசிஐ நிர்வாகிகள் ரசித்தபோதிலும் முழு பயோடேட்டாவை அனுப்பிவைக்கும்படி அவருக்கு தகவல் அனுப்பியுள்ளனர். பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களை கிரிக்கெட் ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருக்கும் சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகியோர்கள் தான் இண்டர்வியூ எடுக்க வேண்டும். மூவருக்குமே சேவாக்கின் திறமை முழு அளவில் தெரியும் என்பதால் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக சேவாக் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.