Seethakaathi Review
சீதக்காதி: சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த படம்
இயக்குனர் பாலாஜி தரணிதரன் தனது முதல் படமான 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படத்தை முழுக்க முழுக்க காமெடியுடன் கூடிய த்ரில் படத்தை கொடுத்தார். எந்த பாணியிலும் இல்லாமல் வித்தியாசமாக இருந்த அவருடைய திரைக்கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததை அடுத்து தற்போது அடுத்த படைப்பாக 'சீதக்காதி' திரைப்படைத்தை இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட முதல் பட பாணியில் காமெடியுடன் சிந்திக்க வைக்கும் படைப்பாகவும், அதே நேரத்தில் கலைக்கும் கலைஞனுக்கும் என்றுமே அழிவில்லை என்பதை அழுத்தமாகவும் கூறியுள்ளார். இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
73 வயது விஜய்சேதுபதி ஒரு பழம்பெரும் நாடக நடிகர். சினிமா வாய்ப்புகள் வந்தும், மக்கள் முன் நேரடியாக மட்டுமே நடிப்பேன் என்ற பிடிவாதத்துடன் இருப்பவர். நாடகத்திற்கு போதிய வரவேற்பு இல்லாததால் வருமானம் குறைவு, தொடர்ந்து நாடகத்தை நடத்த முடியாத நிலை, அதே நேரத்தில் பேரனின் ஆபரேஷனுக்காக தேவைப்படும் ஒரு பெரிய தொகை என பலவித சிக்கல்களில் இருக்கும்போது கதையில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்படுகிறது. இந்த திருப்புமுனை விஜய்சேதுபதியின் குடும்பத்தின் ஒட்டுமொத்த பணத்தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி சினிமாவுலகில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. அந்த திருப்புமுனை என்ன? சினிமாவுலகில் ஏற்பட்ட பரபரப்பான குழப்பங்கள் என்ன? இதற்கு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு என்ன? என்பதுதான் இந்த படத்தின் கதை
பழம்பெரும் நாடக நடிகராக, மேடையில் கம்பீரமாக, மனைவி குழந்தையுடன் பாசமாக, நாடக கம்பெனி நடத்தும் மெளலியிடம் நேசமாக, விஜய்சேதுபதி நடித்துள்ளார் என்று கூறுவதைவிட வாழ்ந்துள்ளார் என்றுதான் கூற வேண்டும். இவருக்கு மட்டும் எப்படி இந்த மாதிரியான வித்தியாசமான கேரக்டர் கிடைக்கின்றது என்றே தெரியவில்லை. மேடை நாடக காட்சி ஒன்றில் ஒரே ஷாட்டில் இவ்வளவு நீளமான காட்சியில் வேறு எந்த நடிகராவது நடிக்க முடியுமா? என்பது சந்தேகம்தான்.
விஜய்சேதுபதியின் நடிப்புக்கு எந்த அளவிலும் குறைவில்லாத நடிப்பு ராஜ்குமாரின் நடிப்பு. ஒரு கேரக்டருக்கு ஏற்றவாறு சரியாக வேண்டும் என்பது எளிதானதுதான். ஆனால் அந்த கேரக்டருக்கு தப்பாக நடிக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய கஷ்டம். அதை மிக அசால்ட்டாக செய்துள்ளனர் ராஜ்குமாரும், சுனிலும்.
இந்த படத்தின் தூண் என்று மெளலி கேரக்டரை கூறலாம். இவருடைய நாடக, சினிமா அனுபவம் இவரது கேரக்டரை நன்கு மெருகேற்றியுள்ளது.
பகவதி பெருமாள், இயக்குனர் மகேந்திரன், அர்ச்சனா, உள்பட அனைவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக அர்ச்சனாவுக்கு வசனம் அதிகம் இல்லை என்றாலும் அவரது முகமும் கண்ணும் அப்படி நடித்துள்ளது. ரம்யா நம்பீசன், பார்வதி நாயர் மற்றும் காயத்ரி ஆகிய மூவரும் நடிகைகளாகவே நடித்துள்ளனர். கருணாகரனுக்கு முதல்முறையாக காமெடி இல்லாத கேரக்டர். இயக்குனர் மகேந்திரன் சிறிது நேரமே வந்தாலும் திருப்தி தரும் நடிப்பு
கோவிந்த் மேனனின் இசையில் தியாகராஜன் குமாரராஜா எழுதிய 'அய்யா' பாடலும், மதன் கார்க்கி எழுதிய 'அவன்' பாடலும் அருமை. அதேபோல் கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப அருமையான பின்னணி
சரஸ்காந்த் ஒளிப்பதிவு ஓகே ரகம். ஆனால் படம் 173 நிமிடங்கள் என்பது ரொம்ப நீளம். சினிமா படப்பிடிப்பு காட்சிகள் உள்பட ஒருசில காட்சிகளை எடிட்டர் கட் செய்திருக்கலாம்
கலைக்கும் கலைஞனுக்கும் என்றுமே அழிவில்லை அது ஏதாவது ஒரு ரூபத்தில் வாழ்ந்து கொண்டே இருக்கும் என்பதை இயக்குனர் பாலாஜி தரணிதரன் தனது பாணியில் நகைச்சுவையுடன் பதிவு செய்துள்ளார். முதல் அரைமணி நேரம் மிக மெதுவாக நகரும் திரைக்கதை அதன்பின் மெதுவாக வேகமெடுத்து இடைவேளையின்போது ஜெட் வேகத்தில் பறக்கின்றது. ஆனால் இரண்டாம் பாகத்தில் ரிப்பீட் காட்சிகளும், லாஜிக் மீறல்களும் கொஞ்சம் நெளிய வைக்கின்றது. இயக்குனர் சொல்ல வந்ததை மிகச்சரியாக முதல் பாதியில் கூறி முடித்துவிட்டதால் இரண்டாம் பாதி திணறுகிறது. இந்த படத்தில் இயக்குனரிடம் கேட்க வேண்டிய ஒருசீல சந்தேகங்கள் மனதில் எழுகிறது. ஆனால் அதில் ஒன்றை கேட்டால் கூட இந்த படத்தின் மிகப்பெரிய திருப்புமுனை என்ற சஸ்பென்ஸ் உடைந்துவிடும் என்பதால் இத்துடன் முடித்து கொள்கிறோம்.
மொத்தத்தில் 'சீதக்காதி' திருப்தியுடன் வெளியே வரும் அளவிற்கு ஒரு நல்ல தரமான படைப்பு
- Read in English