இண்டர்வெல் என்பதை எடுத்தால் தான் சினிமா முன்னேறும்: இயக்குனர் சீனுராமசாமி
- IndiaGlitz, [Thursday,September 12 2024]
சினிமா தொழில் முன்னேற வேண்டுமென்றால் முதலில் இண்டர்வெல் என்பதை எடுத்து விட வேண்டும் என ’கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். அதற்காக திரையரங்கில் ஸ்டால் வைத்திருப்பவர்கள் என் மீது கோபப்படக்கூடாது என்றும் பாப்கார்ன் வாங்கி சாப்பிடுபவர்கள் எப்படியும் சாப்பிட்டு விடுவார்கள் என்றும் அவர் கூறினார்
அந்த காலத்தில் சம்பூர்ண இராமாயணம் உள்பட சில படங்கள் 3 மணி நேரம் நேரம் எடுத்தார்கள், அதனால் அவர்களுக்கு இண்டர்வெல் விட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால் தற்போது இன்டர்வெல் என்பது தேவையில்லாத ஒன்று.
மேற்கத்திய நாடுகளில் வெப் சீரிஸ் களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அதற்கு பெரிய வரவேற்பு இல்லை. மேற்கத்திய நாட்டில் அவர்களுக்கு எபிசோடு எபிசோடு ஆக பார்ப்பதற்கு பிடித்திருக்கிறது, ஆனால் நாம் இரண்டு பாகங்களாக மட்டுமே பார்க்கிறோம், இடைவேளைக்கு முன்பு இடைவேளைக்கு பின்பு.
சினிமா என்பது ஒரு முழு உடல், அதை தனித்தனியாக பிரித்து பார்க்க கூடாது, ஒரே நேரத்தில் அதை அனுபவிக்க வேண்டும். அப்படி ஒரு அனுபவம் ’கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்படத்தை பார்ப்பவர்களுக்கு கிடைக்கும் என இயக்குனர் சீனுராமசாமி தெரிவித்தார்.