ஒரு திரைப்படம் தணிக்கை செய்ய 68 நாட்களா? சீனுராமசாமி கண்டனம்

  • IndiaGlitz, [Monday,November 06 2017]

ஒரு திரைப்படம் தணிக்கை செய்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை சமீபகாலமாக நடைமுறையில் இருந்து வரும் நிலையில் தற்போது தணிக்கை வாரியம் புதிய நிபந்தனை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு திரைப்படம் தணிக்கைக்கு விண்ணப்பித்தால் 68 நாட்களுக்கு பின்னரே தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுமாம். இந்த 68 நாட்கள் எதற்கு என்பதற்கும் தணிக்கை வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

1. விண்ணப்பங்களை பரிசீலனை - 7 நாட்கள்

2. ஆய்வுக்குழு அமைத்தல் - 15 நாட்கள்

3. ஆய்வுக்குழு அறிக்கையை தணிக்கை வாரியத் தலைவருக்கு அனுப்புதல் - 10 நாட்கள்

4. விண்ணப்பதாரருக்கு உத்தரவு குறித்து தெரியப்படுத்துதல் - 3 நாட்கள்

5. தயாரிப்பாளர் நீக்கப்பட்ட காட்சிகளை ஒப்படைக்க அவகாசம் - 14 நாட்கள்

6. நீக்கப்பட்ட காட்சிகளை ஆய்வு செய்தல் - 14 நாட்கள்

7. சான்றிதழ் வழங்க - 5 நாட்கள்

திரைப்படங்கள் பெரும்பாலும் வட்டிக்கு வாங்கி தயாரிக்கப்படுவதால் தணிக்கை செய்ய 68 நாட்கள் என்பது மிகவும் அதிகம் என்றும் இதனால் தயாரிப்பாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியதாவது: திரைப்படங்கள் ஒன்றும் வழக்குகள் அல்ல? தணிக்கை செய்ய இரண்டு மாதமாகுமெனில் வட்டி யார் கட்டுவது கலைஞர்கள் வாழவே கூடாதா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தணிக்கை வாரியத்தின் இந்த புதிய கெடுபிடிகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.