கட்டணத்தில் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள்.....! சீமான் அறிக்கை...!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனியார் பள்ளிகள், இணையவழிக்கல்வி என்ற பெயரில் அதிகமாக கட்டணத்தை வசூலித்து வருகின்றன. இவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
"கொரோனா ஊரடங்குக்காலத்தில் இணையவழியில் கல்வி பயிற்றுவித்து வரும் தனியார் பள்ளிகள் கட்டணக்கொள்ளையில் ஈடுபட்டுவருவதாகப் பெற்றோர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அது குறித்துத் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காது, கண்டும் காணாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது. கொரோனா நோய்த்தொற்றுப்பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு முழுமைக்கும் நிலவும் ஊரடங்கின் விளைவினால் தொழில் நிறுவனங்கள் யாவும் முடங்கி வேலைவாய்ப்புகள் பறிபோய், சிறு, குறு தொழில் முனைவோர், கைத்தொழில் செய்வோர், அன்றாடம் கூலிவேலைக்குச் செல்வோர் என எல்லாத் தரப்பினரும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி, வேலை இழப்பு, சம்பளக்குறைப்பு, வருமானமின்மை எனப் பொருளாதார நசிவால் ஒட்டுமொத்த மக்களும் பெருந்துயரில் சிக்கித் தவிக்கும் கொடிய நிலையில் தனியார் பள்ளிகள் கட்டணக்கொள்ளையில் ஈடுபட்டு அவர்களை மேலும் துயரத்திற்கு ஆட்படுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது. நியாய விலைக்கடைகளில் அனைத்து உணவுப்பொருட்களும் இலவசமாக வழங்கினால்தான் அடித்தட்டு உழைக்கும் மக்கள் உயிர்வாழ முடியும் எனும் துயர்மிகு சூழ்நிலையில் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகத்தொகையைக் கல்விக்கட்டணமாகச் செலுத்துமாறு பெற்றோர்களைத் தனியார் பள்ளி நிறுவனங்கள் நெருக்குவது ஏற்கவே முடியாத கொடுமையாகும்.
ஒரு மாணவருக்கான இணையவழி கல்விக்கட்டணமாக, மொத்தக் கல்விக்கட்டணத்தில் 75 விழுக்காடு மட்டுமே வசூலிக்க வேண்டுமென்று கடந்த ஆண்டுச் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவையே, இந்த ஆண்டும் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்த பிறகும்கூட, அவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு அரசின் உத்தரவை அலட்சியம் செய்துள்ள தனியார் பள்ளிகள் மிக அதிகக்கட்டணங்களைப் பெற்றோர்கள் மீது திணிப்பது மிகப்பெரும் முறைகேடாகும் அதுமட்டுமின்றி, பேரிடர் மேலாண்மைச்சட்டம் 2005ன் படி, 2020-21 ஆம் ஆண்டுக்கான கல்விக்கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களையோ, பெற்றோர்களையோ கட்டாயப்படுத்தக்கூடாது; 2019-20 ஆம் ஆண்டுக்கான கட்டணத்தில் ஏதேனும் செலுத்தப்பட வேண்டிய தொகை மீதமிருந்தாலும் அதைச் செலுத்துமாறும் வற்புறுத்தக்கூடாது என்பது போன்றவைகளை வலியுறுத்தி, கடந்தாண்டு அன்றைய அதிமுக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதுபோன்றதொரு, முன்னெடுப்பை தற்போதைய திமுக அரசு எடுக்கத் தவறிவிட்டதும் இத்தகைய கட்டணக்கொள்ளைக்கு முதன்மை காரணமாகிறது. ஏற்கனவே, இப்பேரிடர் காலத்தில் இணையவழி வகுப்புகளுக்கான இணைய வசதியைப்பெறுவதற்காக மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையினைச் செலவிட வேண்டியுள்ள நிலையில், அதற்கு மேலும், ஆய்வகக்கட்டணம், இணையக் கட்டணம், ,கணினிக்கட்டணம், விளையாட்டுக்கட்டணம் என மாணவர்கள் பயன்படுத்தாதவற்றிற்கும் சேர்த்துக் கட்டணம் வசூலிப்பது என்பது கட்டணக்கொள்ளையேயன்றி வேறில்லை. பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பினால் குடும்ப வறுமையைப் போக்க நடுத்தர மற்றும் அடித்தட்டு உழைக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர் வேலைக்குச் செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இச்சூழ்நிலையில் அவர்களைக் அதிகக் கல்விக்கட்டணம் செலுத்துமாறு துன்புறுத்துவது மாணவர்களின் இடைநிற்றலுக்கு வழிவகுத்து, கல்வியைவிட்டே அவர்களைக் அப்புறப்படுத்தும் சமூக அநீதியாகும்.
ஆகவே, தமிழக அரசு அறிவித்துள்ள கல்விக்கட்டணத்தைவிட அதிகக் கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணங்களைத் தொடர்ந்து கண்காணித்து ஒழுங்குபடுத்த ஆணையம் ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். மேலும், மாணவர்கள் இணையவழி வகுப்புகளில் பங்கேற்பதில் எவ்விதத் தடையும் ஏற்படாமலிருக்க பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் சிறப்பு உதவித்தொகை வழங்க வேண்டுமெனவும் கோருகிறேன்" என கூறப்பட்டுள்ளது.
இணையவழிக் கல்வி எனும் பெயரில் கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது, தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!https://t.co/EWklHrfFYx pic.twitter.com/A0zQNJkJq9
— சீமான் (@SeemanOfficial) July 7, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout