தம்பி விஜய் போன்ற நடிகர்களுக்கே இந்த நிலையா? பொங்கிய சீமான்
Send us your feedback to audioarticles@vaarta.com
தம்பி விஜய் போன்ற நடிகர்களுக்கு இந்த நிலையா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பொங்கி எழுந்து அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் தெலுங்கு மாநிலங்களில் தெலுங்கு நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படும் என அம்மாநில திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விழாக்காலங்களில் நேரடித் தெலுங்குத் திரைப்படங்களுக்கு மட்டுமே ஆந்திராவில் முன்னுரிமை அளிக்கப்படும் எனும் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. எண்ணற்ற தெலுங்குத்திரைப்படங்கள் தமிழகத்தில் எவ்விதத் தடையுமின்றி வெளியாகிக் கொண்டிருக்கிற நிலையில், தமிழ்த்திரைப்படங்கள் வெளியாவதற்குக் கெடுபிடி விதித்திருக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவு மிகத்தவறான முன்னுதாரணமாகும்.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களைச் சேர்ந்த திரைத்துறையினருக்கும் புகலிடமாகவும், மூலமாகவும் விளங்கிய தமிழ்த்திரையுலகை வஞ்சிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவால், தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் அன்புத்தம்பி விஜய் அவர்களது வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டுக்கானத் திரையரங்க ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
நேரடித்தெலுங்குத் திரைப்படங்களோ, மொழிமாற்றம் செய்யப்பட்ட தெலுங்குத் திரைப்படங்களோ எதுவாகினும் தமிழகத்தில் எவ்விதப் பாரபட்சப்போக்குக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப்படாது, தமிழ்த்திரைப்படங்களுக்கு இணையாகத் திரையரங்குகளைப் பெற்று வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்நடவடிக்கை தேவையற்ற ஒன்றாகும்.
பாகுபலி,ஆர்.ஆர்.ஆர்., புஷ்பா, காந்தாரா, கே.ஜி.எப். எனப் பிறமொழி படங்களுக்கு தமிழகத்தில் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும்போது, அப்படங்களுக்கு இருந்த மக்கள் ஆதரவுதான் அளவுகோலாக வைக்கப்பட்டதே ஒழிய, மொழிப்பாகுபாடு ஒருபோதும் காட்டப்பட்டதில்லை.
'கலைக்கு மொழி இல்லை' என்றுகூறி, தமிழ்த்திரையுலகிலும், திரையரங்க ஒதுக்கீட்டிலும் மற்ற மொழியினருக்கும், அவர்களது திரைப்படங்களுக்கும் பெருவாய்ப்பு வழங்கி, 'தென்னிந்திய நடிகர் சங்கம்' எனப் பெயரைத் தாங்கி நிற்கும் தமிழ்த்திரையுலக்கு இந்நிகழ்வு ஒரு பாடமாகும்.
திரைப்படைப்புகளுக்கும், படப்பிடிப்புகளுக்கும் மற்ற மொழியினரையும், மற்ற மாநில திரைத்துறையையும் பயன்படுத்தி கொண்டு, திரையரங்க ஒதுக்கீட்டில் காட்டப்படும் சமத்துவமற்ற இத்தகைய அணுகுமுறை நலம் பயக்கக் கூடியதல்ல!
தென்னிந்திய நடிகர்களுள் முதன்மையானவராகத் திகழும் தம்பி விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கே இந்நிலையென்றால், மற்ற படங்களின் நிலை என்னவாகும்? எனும் கேள்விதான் எழுகிறது.
இச்சிக்கல், விஜய் எனும் ஒரு நடிகரின் திரைப்பட வெளியீட்டுக்கு எழுந்திருக்கும் சிக்கலல்ல; தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிராகவே ஆந்திராவில் தொடுக்கப்பட்டிருக்கும் மறைமுக நெருக்கடியாகும். இதனை ஒருபோதும் ஏற்கவோ, அனுமதிக்கவோ முடியாது.
ஆகவே, தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான தெலுங்குத்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இம்முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், தெலுங்கு திரைப்படங்களைத் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோமென வன்மையாக எச்சரிக்கிறேன்.
இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான முடிவைத் தெலுங்குத் தயாரிப்பாளர் சங்கம் திரும்பப்பெறாவிட்டால், தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம்!https://t.co/mLqH4BjYG1 pic.twitter.com/CgEoSX8AJp
— சீமான் (@SeemanOfficial) November 18, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments