உழைப்புன்னா என்னன்னு தெரியுமா? கமல், ரஜினியை தாக்கிய சீமான்

  • IndiaGlitz, [Saturday,April 27 2019]

கமல்ஹாசன் அரசியலில் குதித்து கட்சி ஆரம்பித்தபோது சந்தித்த பிரபலங்களில் ஒருவர் சீமான். கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்தி அவர் அரசியலில் பெரிய ஆளாக வேண்டும் என்று கூறிய சீமான், தற்போது திடீரென அவரை விமர்சனம் செய்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத முதல் தேர்தலில் அதிமுக, திமுக வாக்கு சதவிகிதத்தை உடைப்பது யார்? என்ற போட்டி கமல், சீமான் இடையே இருந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இதில் கமல், சீமானை முந்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்தே அவர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்து தற்போது பேசியுள்ளதாக தெரிகிறது.

இலங்கை குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசியதாவது: கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் நோக்கமற்றவர்களாக அரசியலுக்கு வந்துள்ளார்கள். ஆற்றுமணல் கொள்ளை, மலைகளை கற்குவாரிகளை அள்ளி கொண்டுபோவது, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்றவற்றில் கமல்ஹாசன் ரஜினிகாந்த் கருத்து என்ன? பொன்பரப்பியில் நடந்த சாதிக்கலவரத்தில், இலங்கை குண்டுவெடிப்பில் இந்த இருவரின் கருத்து என்ன?

கமல்ஹாசன் கடுமையாக இந்த தேர்தலில் உழைத்ததாக இந்து என்.ராம் கூறுகிறார். கமல்ஹாசன் உழைத்தாரா? உழைப்புன்னா என்னன்னு அவருக்கு தெரியுமா? அரசியலை சினிமா போலவே எண்ணிக் கொண்டு, செட் போட்டுக்கிட்டு.. மூஞ்சியில டார்ச் லைட்டு அடிச்சிக்கிட்டு இருக்கார், அவரை போய் உழைப்பாளின்னு சொல்றார் இந்து ராம்.

என் கணிப்பு சரியாக இருந்தால் 6 விழுக்காடு ஓட்டு பெற்று சரியான இடத்தை தக்க வைத்து கொள்வார் கமல் என்று எஸ்.வி.சேகர் சொல்றார். இந்த பாசம் எங்க கூட்டத்துல ஒருபயலுக்கும் என் மேல இருக்க மாட்டேன்குதே ஏன்? என்னை காலி பண்றதுக்குதான் வேலை நடக்குது என்று சீமான் ஆதங்கத்துடன் பேசினார்.