சட்டசபை தேர்தலிலும் 234 தொகுதிகளில் தனித்து போட்டி! சீமான் அறிவிப்பு

கடந்த 2014ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது மட்டுமின்றி டெபாசிட்டையும் இழந்தது. இருந்தும் வரும் மக்களவை தேர்தலிலும் 40 தொகுதிகளிலும் அக்கட்சி தனித்து போட்டியிடுகிறது.

மற்ற கட்சிகள் கூட்டணிக்கு அழைக்காததால் தனித்து போட்டியா? அல்லது தனித்து போட்டியிடுவதே நாம் தமிழர் கட்சியின் தனித்த கொள்கையா? என்பது விவாதத்திற்குரிய விஷயம். இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவுள்ளதாக சீமான் நேற்றைய தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். மேலும் எந்த காலத்திலும் அதிமுக, திமுக மற்றும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதையும் அவர் உறுதி செய்துள்ளார்.

சீமானின் பேச்சை கேட்க ஒவ்வொரு தொகுதியிலும் கூடும் கூட்டத்தினரில் பாதிபேர் ஓட்டு போட்டாலே அவர் பல தொகுதிகளில் இந்நேரம் வென்றிருப்பார். ஆனால் அவரது பேச்சை கேட்க வருபவர்களை அவரால் தனக்கு ஓட்டு போடுபவர்களாக மாற்ற முடியாததே அவரது பிரச்சனையாக உள்ளது. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு டெபாசிட்டை இழப்பதை விட ஐந்து அல்லது பத்து தொகுதிகளில் போட்டியிட்டு முழு கவனம் செலுத்தி அவற்றில் வெற்றி அடைவதே இப்போதைக்கு அவரது இலக்காக இருக்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்