ஊடகவியலாளர்களை முன்களப்பணியாளர்காளாக அறிவியுங்கள்...! முதல்வருக்கு சீமான் கோரிக்கை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஊடகவியலாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா காலத்தில் களப்பணியில் ஈடுபட்டுள்ள, அனைத்து நிலை ஊடகவியலாளர்களையும், எந்த பாகுபாடும் இல்லாமல் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு அரசு சார்பாக அனைத்து உதவிகளும் கிடைக்க முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என சீமான் அவர்கள் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் தூய்மைப்பொறியாளர்களைப் போன்று பேரிடர் கால அவசரச் செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களை முன் களப்பணியாளர்களாக அறிவித்தது வரவேற்கத்தக்கதென்றாலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் ஊடகவியாளர்களுக்கு மட்டுமே இவ்விதிமுறை பொருந்துமெனக் கூறப்படுவது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
அரசின் அடையாள அட்டையானது அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் எளிதில் கிடைப்பதில்லை என்பதே தற்காலத்திலிருக்கிற புறச்சூழல் சிக்கலாகும். குறிப்பாக, தொற்றுப்பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் களப்பணியில் ஈடுபட்டுள்ள இளம் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்டோருக்கு அரசின் அங்கீகார அட்டை என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. பல ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்த மிக மூத்த ஊடகவியலாளர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே தொடர்புடைய செய்தி நிறுவனங்கள் மூலம் அரசின் அங்கீகார அட்டையைப் பெறும் வாய்ப்பமைகிறது. இதனால், தங்களுக்கு அரசு அறிவித்துள்ள எவ்வித உதவியும் கிடைப்பதில்லையென உயிரைப் பணயம் வைத்துக் களப்பணியில் ஈடுபடும் இளம் ஊடகவியலாளர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
அண்மைக்காலமாகக் களப்பணியில் ஈடுபடும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் தொற்றினால் பாதிக்கப்படும் நிகழ்வுகளும், மரணமடையும் நிகழ்வுகளும் தொடர்ந்து வருகின்றன. மழை, வெள்ளம், புயல், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கைப் பேரிடர் ஏற்படும் காலங்களிலும், டெங்கு, கொரோனா போன்ற நோய்த்தொற்று பரவல் காலங்களிலும், மின்சாரமே சென்று சேராத தொலைதூரக் குக்கிராமங்கள் முதல் மலைவாழ் பகுதிகள் வரை சென்று தன்னலமற்றுக் களத்தில் நின்று மக்களுக்கும், அரசிற்கும் இடையே பாலமாகச் செயல்பட்டுச் செய்திகளை உடனுக்குடன் கொண்டுபோய்ச் சேர்க்கும் ஊடகவியலாளர்களின் பெரும்பணியென்பது போற்றுதலுக்குரியது. அத்தகைய பணிகளில் ஈடுபட்டு மக்களின் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் முன்களத்தில் நின்று அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றி, அதன் காரணமாகக் கொரோனா பெருந்தொற்றிற்கு ஆளாகி தங்கள் இன்னுயிரை இழந்த ஊடகவியலாளர்களுக்கு அரசின் எவ்விதத் துயர் துடைப்பு உதவியும் கிடைப்பதில்லை என்பது சொல்லவியலாப் பெருங்கொடுமையாகும். ஆகவே, இந்த நடைமுறை சிக்கலைக் கருத்தில்கொண்டு ஊடகத்துறையில் முன் களப்பணியாளர்களாக அறிவிக்க, அரசு விதித்துள்ள எழுத்துப்பூர்வமற்ற வாய்மொழி கட்டுப்பாடுகளை நீக்கவேண்டும் எனவும், இணைய ஊடகங்களையும் அங்கீகரித்து, அதில் பணியாற்றுவோரையும் ஊடகவியலாளர்களாக ஏற்க வேண்டுமெனவும், ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் சான்று வைத்துள்ள அனைத்துநிலை ஊடகவியலாளர்களையும் முன் களப்பணியாளர்களாக ஏற்று மாத ஊக்கத்தொகை ரூபாய் ஐயாயிரம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் பத்து இலட்சம் ரூபாய் துயர் துடைப்பு நிதி என அரசின் அனைத்து வகையான உதவிகளும் கிடைக்கும் வகையில் விரிவான அறிவிப்பை வெளியிட வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
களப்பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துநிலை ஊடகவியலாளர்களையும் எவ்விதப் பாகுபாடுமின்றி முன் களப்பணியாளர்களாக அறிவித்து, அரசின் உதவிகள் அனைத்தும் கிடைக்கப்பெற ஏற்பாடு செய்ய வேண்டும்!https://t.co/p9jCYCjQJ3 pic.twitter.com/MULI1u7s4C
— சீமான் (@SeemanOfficial) May 29, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com