'கோபம்' டைட்டில் ஏன்? சீமான் விளக்கம்
- IndiaGlitz, [Saturday,June 03 2017]
பிரபல இயக்குனர் சீமான் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் திரையுலகில் ரீஎண்ட்ரி ஆகி இயக்கவுள்ள திரைப்படம் 'கோபம்'. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நாயகான நடிக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு 'கோபம்' என்ற டைட்டில் ஏன்? பொதுவாக சீமான் அரசியல் கூட்டங்கள் அனைத்திலும் சமுதாயத்தில் உள்ள அவலங்கள் குறித்து கோபமாக ஆக்ரோஷமாக பேசுவார் என்பது தெரிந்ததே. எனவே இந்த படத்திற்கு 'கோபம்' என்ற டைட்டில் ஏன் என்று சீமான் பேட்டி ஒன்றில் கூறியதாவது:
சமுதாயத்தின்மீது தனி மனிதர்கள் காட்டும் கோபம்தான் இந்தப் படம். அன்றாட வாழ்க்கையில் பல கோபங்களைக் கடந்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தவறு செய்கின்ற மனிதர்கள் மீதான கோபம், ஆளத் தெரியாத அரசின் மீதான கோபம் என ஒவ்வொரு நாளும் விதவிதமான கோபங்கள் மக்கள் மத்தியில் உருவாகிறது. 'தண்ணீரை வீணாக்காதீர்கள்' என்று லாரியில் எழுதப்பட்டிருக்கும். ஆனால், அந்தத் தண்ணீர் லாரியே ஊர் முழுக்க நீரை வீணடித்துக்குக் கொண்டே செல்லும். அதைப் பார்க்கும் மக்களுக்குக் கோபம் வரும் இல்லையா? இப்படி மக்கள் அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளும் அதன் வெளிப்பாடாக மக்கள் காட்டும் கோபமும்தான் இந்த படம் என்று கூறினார்.