திமுக அரசு கொடுங்கோன்மையான ஆட்சியை கைவிட வேண்டும்.....! சீமான் கண்டனம்.....!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை, அருகம்பாக்கத்தில் வசித்து வரும் பூர்வகுடிகளை, தங்களுடைய சொந்த இடத்தை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறது திமுக அரசு. இதுபோன்ற கொடுங்கோன்மையான ஆட்சியை அரசு உடனடியாக கைவிடவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இராதாகிருட்டிணன் நகரில், கடந்த 30 வருடத்திற்கும் மேலாக வசித்து வரும் ஆதித்தமிழ்க்குடிகளின் வீடுகளை அதிகாரத்தின் துணைகொண்டு இடித்துத் தரைமட்டமாக்கி, அவர்களை ஒட்டுமொத்தமாக அங்கிருந்து வெளியேற்றும் ஆளும் திமுக அரசின் கொடுஞ்செயல் அதிர்ச்சியளிக்கிறது. மண்ணின் மக்களை ஒட்டுமொத்தமாக பூர்வீக நிலத்தைவிட்டு வற்புறுத்தி வெளியேற்றி, அப்புறப்படுத்தும் இக்கொடுங்கோல்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
அரை நூற்றாண்டுகால திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகரத்தை நிர்மாணிக்க உழைத்த ஆதிக்குடிகளை மண்ணைவிட்டே முற்றாக வெளியேற்றி, அந்நியர்களை ஆக்கிரமிக்கவிட்டதன் விளைவாக, தமிழகத்தின் தலைநகரே வந்து குடியேறியவர்களின் வேட்டைக்காடாக மாறி நிற்கிறது என்பது வரலாற்றுப் பெருந்துயரமாகும். சென்னையின் பூர்வகுடிகளான ஆதித்தமிழ்க்குடிகள் மெல்ல மெல்ல அவர்கள் வசித்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, மாற்றுக்குடியிருப்பு எனும் பெயரில் நகரத்திற்கு வெளியே ஆளும் திராவிட ஆட்சியாளர்களால் தூக்கி வீசப்படுவது வழமையான நிகழ்வுகளாகிவிட்டது. ஆரிய ஆதிக்கம் ஊருக்கு வெளியே சேரிகளைக் கட்டமைத்ததுபோல, திராவிட அரசுகள் பூர்வீக தமிழ்மக்களை நகரத்திற்கு வெளியே தள்ளிவிட்டிருக்கிறது. ஆனால், இதே நகரத்தின் மையத்தில் வசிக்கும், இம்மண்ணிற்குச் சிறிதும் தொடர்பில்லாத அந்நியர்கள் ஒருவர்கூட இடநெருக்கடி, நகர விரிவாக்கம் என எவ்விதக் காரணங்களுக்காகவும் வெளியேற்றப்படவில்லை என்பது திராவிடக்கட்சிகளின் வெளிப்படையான தமிழர் விரோத மனப்பான்மையை வெளிக்காட்டுகிறது.
சென்னை மாநகரில் நிகழும் மிகுதியான மக்கள் குடியேற்றத்தினால் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இடநெருக்கடியைச் சமாளிக்க ஒவ்வொரு முறையும் குடிசைப்பகுதியில், நீண்டகாலமாக வசிக்கின்ற ஏழை, எளிய தொல்குடி தமிழர்களை அவர்களின் வாழ்விடத்திலிருந்து தொடர்ச்சியாக வெளியேற்றுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. சென்னையில் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எவ்வித தடையுமின்றி, நிரந்தர வசிப்பிடம் பெற்று, பாதுகாப்பாக அனைத்து வசதிகளும் நிறைந்த நகரின் முக்கியப் பகுதிகளில் குடியேறி வாழ முடிகிறது. ஆட்சி, அதிகாரத்தைச் சேர்ந்தவர்களும், மேல்தட்டு வர்க்கத்தினரும் சென்னையின் நூற்றுக்கணக்கான நீர்நிலைகளையும், புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வசிப்பிடங்களில் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படாமலும், எவ்வித அதிகார அச்சுறுத்தல்களுக்கு ஆளாகாமலும் நிலைத்து வாழ முடிகிறது. ஆனால், எதிர்த்துக் கேள்விகேட்க அறியாத பாமரர்களாகிய குடிசைப்பகுதிகளில் வசிக்கும் பூர்வகுடி தமிழர்களை மட்டும் எளிதாக விரட்டியடிப்பதும், அவர்களின் பூர்வீக இடத்திலிருந்து வெகுதூரத்தில், நகரத்திற்கு வெளியே துரத்தியடித்து வாழ்வாதாரத்தை அழித்தொழிப்பதென்பது அரச கொடுங்கோன்மையின் உச்சமாகும். இதில் இரு திராவிடக்கட்சிகளும் விதிவிலக்கல்ல. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை தீவுத்திடல் அருகே சத்தியவாணி முத்துநகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நெடுங்காலமாக வசித்துவந்த தொல்குடி தமிழர்களின் குடிசைகளை எவ்வித முன்னறிவிப்புமின்றி அகற்றி, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியது போல, தற்போது சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் பூர்வகுடி மக்களின் 270 வீடுகளை முழுவதுமாக இடித்துத்தள்ளி அவர்களைச் சொந்தநிலத்தை விட்டு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துகிறது திமுக அரசு. இதன்மூலம் தமிழர்களை நிலமற்ற அகதிகளாக்கவே இரு திராவிடக்கட்சிகளும் முனைகிறது.
காலங்காலமாக வாழ்ந்து வருகிற மக்களை, ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ எனக்கூறி அப்புறப்படுத்த முனைகிறது அரசு. ஆதித்தமிழர்களுக்கென வெள்ளையர் காலத்தில் அளிக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் அவர்கள் வசம் இருந்திருந்தால் அவர்கள் ஏன் இந்நிலத்தில் வாழப் போகிறார்கள்? இம்மக்களை ஆக்கிரமிப்பாளர்களென்று கூறி அவர்களது குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்துகிற அரசு, அதே போல பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்தவர்களையும் அப்புறப்படுத்தி அந்நிலங்களை மீட்டெடுத்து உரியவர்களிடம் ஒப்படைக்க முயலுமா? எனும் கேள்விக்கு இதுவரை பதிலிலில்லை.
ஐ.நா. அவையின் வரையறையின்படி, 50 ஆண்டுகளுக்கு மேலாக ஓரிடத்திலேயே மக்கள் நீடித்து நிலைத்து வசித்து வந்தால் அவர்களது குடியிருப்புகளுக்கு மாற்றாக, புதிய குடியிருப்புகள் கட்டப்படுகிறபோது ஒவ்வொருவருக்கும் தலா 450 சதுர கிலோமீட்டர் வீதம் ஒதுக்க வேண்டும் என்கிறது விதி. இங்கு அதற்கு நேர்மாறாக, 250 சதுரகிலோ மீட்டரை அதுவும் அவர்களது வாழ்விடத்திற்குத் தொடர்பற்ற இடத்தில் கொடுக்கிறது அரசு. இது ஐ.நா.அவையின் விதிகளுக்கு முற்றிலும் எதிரானது.
சென்னையின் மைந்தர்களான அடித்தட்டு உழைக்கும் மக்கள் அதிகப்படியாக வாழும் பகுதிகளில்தான் இவையாவும் நடந்தேறுகிறது. பல தலைமுறைகளாக அந்நிலத்தைத் தங்களது பூர்வீகமாகக் கொண்டு நிலைபெற்று நீடித்து வாழும் அம்மக்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தொழில் அவர்களது வாழ்விடத்தை ஒட்டியே இருக்கிறது. அவர்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றும்போது அவர்களது வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டு அவர்களின் பொருளாதாரச்சூழல் மிகவும் மோசமான நிலையை எட்டுகிறது. மாற்றுக்குடியிருப்புகளையும், வாழ்வாதாரத்திற்கான பொருளாதார வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தராது நிலத்தைவிட்டு அம்மக்களைக் கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்துவது அப்பட்டமான மக்கள் விரோதமாகும்.
அடித்தட்டுப் பொருளாதாரப் பின்புலத்தைக் கொண்டு வாழும் இம்மக்கள் யாவரும் அன்றாடங்காய்ச்சிகளாகவும், கூலித்தொழிலாளர்களாகவுமே இருக்கிறார்கள். அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் அவர்களின் வாழ்விடங்களுக்கு அருகாமையிலேயே இருந்தால் மட்டுமே அவர்களால் எவ்விதச் சிரமமுமின்றி வாழ்க்கையினை நகர்த்த முடியும். ஆனால், அதனைச் செய்யாது அவர்களுக்கே தொடர்பேயில்லாத பகுதியில் இடம் ஒதுக்கப்படும்போது அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிப்படைகிறது. கல்லுக்குட்டை, செம்மஞ்சேரி, கண்ணகி நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளிலிருந்து பிழைப்பிற்காக சென்னை மாநகருக்குள் அவர்கள் வந்து செல்வது என்பது சாத்தியமில்லை. ஏற்கனவே, சென்னையிலிருந்து கல்லுக்குட்டைக்கும், செம்மஞ்சேரிக்கும், கண்ணகி நகருக்கும், பெரும்பாக்கத்திற்கும் மாற்றப்பட்ட மக்கள் அங்கு சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏதுவுமற்று, மிகவும் சுகாதாரமற்ற முறையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது வாழ்வாதாரத்தொழிலே பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பென்றால், ஆட்சியாளர்களுக்குக் குடிசைகள் மட்டுமே நினைவுக்கு வருவதேன்? பெரிய வணிக வளாகங்கள், உயர்ந்த கட்டிடங்கள், நட்சத்திர விடுதிகள் போன்றவையெல்லாம் சென்னை மாநகருக்குள் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கிறதே, அதன் மீதெல்லாம் இதேபோல முனைப்போடு நடவடிக்கை எடுப்பார்களா? ஆக்கிரமிப்பை அகற்றுவார்களா? ஆக்கிரமிப்பு எனும் பெயரில், மக்களின் குடியிருப்புகளை அகற்றும் இவர்கள் அந்தப் பகுதியை என்ன செய்யப்போகிறார்கள்? நீர்வழித்தடமா அமைக்கப் போகிறார்கள்? அங்கு இன்னொரு கட்டிடம்தானே கட்டப்போகிறார்கள். அது ஆக்கிரமிப்பில் வராதா? ஆக்கிரமிப்பு எனக் கூறி, மக்கள் மீது பழியைப் போடும் ஆட்சியாளர் பெருமக்கள் அவர்களுக்கு இருக்க மின் இணைப்பு, எரிகாற்று உருளை இணைப்பு, குடும்ப அடையாள அட்டை, வாக்காளர் அட்டை போன்ற அரசின் ஆவணங்களைக் கொடுத்து அங்கீகரித்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? 30 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வரும் நிலையில், அவர்களை ஆக்கிரமிப்பாளரெனப் பழிசுமத்தி விரட்டுவது எந்தவகையிலும் நியாயமில்லை. திமுக, அதிமுக எனும் இரு திராவிடக் கட்சிகளும் தொல்குடி மக்களை நகரத்தைவிட்டு வெளியேற்றி, கண்ணகி நகர், செம்மஞ்சேரி, கல்லுக்குட்டை, பெரும்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு விரட்டியடிப்பது மிகப்பெரும் மக்கள் விரோதமாகும்.
‘கிராமங்களிலேயே கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தந்து, நகரத்தை நோக்கி மக்கள் இடம்பெயர்வதைத் தடுக்காமல் விட்டதன் காரணமாகவே நகரம் பிதுங்கி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தேவையைக் கருத்தில்கொண்டு சென்னை மாநகரின் உள்கட்டமைப்பைச் செழுமைப்படுத்த தவறியதாலும், மிதமிஞ்சிய ஊழல் மற்றும் இலஞ்சம் நிறைந்த ஐம்பதாண்டு கால திராவிட ஆட்சிகளின் காரணமாகவும் சென்னை அதன் தனித்தன்மையை இழந்து வாழத்தகாத நகரமாக மாறிவருகிறது. மேலும், நிலம், நீர் , காற்று ஆகியவை முற்றாக மாசுபட்டு, சுற்றுச்சூழல் சீர்கெட்டுக் கோடைக்காலத்தில் கடும் வறட்சியும், மழைக்காலத்தில் பெருவெள்ளமும் ஏற்பட்டுத் தவிக்கும் நிலைக்குத் தலைநகர் தள்ளப்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் தாங்கள் செய்தத் தவறினை மறைக்க, அப்பாவி பூர்வகுடி தமிழர்களை வெளியேற்றித் தண்டிப்பதென்பது வாக்களித்து ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்.
ஆகவே, சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் மண்ணின் மக்களான ஆதித்தமிழ்க்குடிகளைச் சொந்த நிலத்தை விட்டு வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும், அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே பாதுகாப்பான, நிரந்தர வசிப்பிடங்களை உருவாக்கித் தரவேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறப்பட்டிருந்தது.
சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் பூர்வகுடிகளைச் சொந்த நிலத்தைவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கொடுங்கோன்மையை ஆளும் திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்!https://t.co/P5r7BY8Dck pic.twitter.com/rrm0Qjw9vq
— சீமான் (@SeemanOfficial) July 30, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments