படங்களில் மட்டுமே புரட்சிகரமான கருத்துக்கள்: ஷங்கரை கடுமையாக சாடிய சீமான்
- IndiaGlitz, [Monday,July 22 2019]
நடிகர் சூர்யாவின் புதிய கல்விக்கொள்கை குறித்த கருத்துக்கு அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் என பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நேற்று இதுகுறித்து கருத்து கூறிய இயக்குனர் ஷங்கர், 'சூர்யா கல்விக்கொள்கை குறித்து பேசியது தனக்கு தெரியாது என்றும், புதிய கல்விக்கொள்கையை தான் இன்னும் படிக்கவில்லை' என்றும் கூறினார்.
ஷங்கரின் இந்த பதிலுக்கு கடுமையாக விமர்சனம் செய்த இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் கூறுகையில், 'அவருடைய சமூகப் பொறுப்பு அவ்வளவு தான். சமகாலத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருப்பது எப்படி எனத் தெரியவில்லை. படங்களில் மட்டும் சமூகக் கருத்துகள், புரட்சிகரமான கருத்துகள் சொல்வது எல்லாம் ஏமாற்று வேலை என்று கூறினார்
மேலும் உயர்நிலை இயக்குநர்கள் 30 கோடி, 40 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் கஜா புயல் போன்ற இயற்கை பேரழிவு ஏற்பட்டபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சிறுதொகை கூட கொடுக்கவில்லை. இவர்களது சமூகப் பொறுப்பு எல்லாம் அவ்வளவு தான். இங்கு 'மது குடிப்பது உடல்நிலைக்கு கேடு. புகைப் பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்' என்று போட்டுவிட்டால் சமூகப் பொறுப்பு முடிந்துவிட்டது என நினைக்கிறார்கள் என்று சீமான் தெரிவித்தார்.