செவாலியே கமலுக்கு ஏன் ரூ.10 கோடி பரிசு அறிவிக்கக்கூடாது? சீமான் கேள்வி

  • IndiaGlitz, [Wednesday,August 24 2016]
சமீபத்தில் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற சிந்துவுக்கு மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டுக்கொண்டு கோடிக்கணக்கில் பரிசுகளை அள்ளி வழங்கி பாராட்டு தெரிவித்து வருகிறது. ஆனால் ஒலிம்பிக் பதக்கத்திற்கு எந்த அளவுக்கும் குறைவில்லாத செவாலியே பட்டம் வென்ற கமல்ஹாசனுக்கு அரசு சார்பில் பரிசுகள் அறிவிக்கவில்லை என்றாலும் ஒரு பாராட்டாவது தெரிவிக்க கூடாதா? என கமலின் உண்மையான ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், இயக்குனரும் அரசியல்வாதியுமான சீமான், இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

செவாலியர் விருதுக்கு கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டதற்கு எந்த ஒரு பரிசையும் தமிழக அரசு அறிவிக்கவில்லை. இந்த தேசமும் அவரைக் கொண்டாடவில்லை. திரையுலகைச் சேர்ந்தவர்கள் அவரைச் சந்தித்துப் பாராட்டுகிறார்கள். தமிழக அரசிடம் இருந்து மனதார ஒரு வாழ்த்துச் செய்தி வந்ததா? செவாலியர் விருதுக்காக ஏன் பத்து கோடி ரூபாய் பரிசு அறிவிக்கக்கூடாது? கமல்ஹாசன் என்ற கலைஞனை தனிச்சொத்தாகப் பார்க்கக் கூடாது. ஒட்டுமொத்த தேசத்தின் சொத்தாகத்தான் பார்க்க வேண்டும். நல்ல சினிமாவை இயக்குவதற்கு வாய்ப்பில்லாமல் பாலு மகேந்திரா சென்று சேர்ந்துவிட்டார். இதற்கு யார் காரணம்? ' இந்த மொழிக்கும் இனத்திற்கும் சேவை செய்ய வேண்டும்' என்பதால்தான் இங்கிருந்தே சிறந்த படங்களை இயக்கினார். நல்ல படைப்பாளிகளுக்கு அரசின் சார்பில் எவ்வித உதவியும் செய்யப்படுவதில்லை.
ஓர் ஆட்டோகிராப் படமோ தவமாய் தவமிருந்து படமோ வராமல் போவதற்கு இதுதான் காரணம். சேரனுக்கும் அமீருக்கும் ஏன் இவ்வளவு இடைவெளி? கலைஞன் என்பவன் அவனாக வர வேண்டும். 'அவனாகப் படைத்து மக்களுக்கு அளிக்க வேண்டும்' என்றால் ஒரு சமூகம் எவ்வாறு மேம்படும். 'கலையையும் இலக்கியத்தையும் போற்றாத ஒரு சமூகம் வாழாது' என்கிறார் தேசியத் தலைவர். கமலுக்கு ஒரு பிரமாண்ட பாராட்டு விழாவை அரசு ஏன் முன்னின்று நடத்தக் கூடாது? தனது படத்திற்காக தேசிய விருதை வென்று வருகிறார் இயக்குநர் பாலா. அவருக்கு ஏன் ஐம்பது லட்சத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் கொடுக்கக் கூடாது. அவருக்கு வீடு உள்ளது...அது வேறு விஷயம்? எல்லா கலைஞனுக்கும் வீடு இருக்கிறதா? காதல் கோட்டை இயக்கிய அகத்தியன் எங்கே போய்விட்டார்? மகேந்திரனை வீட்டில் வைத்திருக்கின்ற சமூகம் மேம்படுமா? அரசு சாராயத்தை விற்கிறது. அதைப்போல நல்ல சினிமா படம் எடுப்பதற்கு உதவி செய்யக் கூடாதா? தேசிய இனத்தின் அழகிய முகமாகத்தான் கலையைப் பார்க்க வேண்டும்.
இந்த நேரத்தில் கமல் போன்ற ஒரு கலைஞனை தேசத்தின் சொத்தாக மாற்றியிருக்க வேண்டாமா? நல்ல படைப்பாளிகளிடம், ' பணத்தை நாங்கள் கொடுக்கிறோம். நல்ல சினிமாவை எடுங்கள். வர்த்தகத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என அரசு அறிவிக்கலாமே? கமல்ஹாசன் தலைமையில் நல்ல இயக்குநர்கள், சிறந்த படங்களை எடுத்துக் கொண்டு உலக நாடுகளுக்குப் பயணித்தால் நமக்குத்தானே பெருமை. ஈரானிய படங்கள் ஏன் இவ்வளவு தூரம் கொண்டாடப்படுகிறது? இவ்வளவு பெரிய நாட்டில், மாட்டுக் கறி தின்பவனை அடித்து உதைப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. 'கிளீன் இந்தியாவுக்கு வாங்க' என்று பிரதமர் மோடி அழைத்தார். அவர்கூட கமல்ஹாசனுக்கு வாழ்த்துச் சொல்லவில்லை.
எனக்குத் தெரிந்த வகையில் முறையாக வரி கட்டுவது இரண்டே நடிகர்கள்தான். ஒருவர் கமல்ஹாசன், இன்னொருவர் மாதவன். சில நடிகர்கள் திருமண மண்டபத்தைக் கட்டிவிட்டு வரி ஏய்ப்பைச் செய்கிறார்கள். திரை உலகுக்கு மட்டும் சொந்தமானவரல்ல கமல். சமூகப் பற்றுள்ள கலைஞன் அவர். எய்ட்ஸ் விழிப்பு உணர்வுக்காக அரசுக்கு இணையாக அவர் பங்காற்றியிருக்கிறார். பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உடை, காலணி வாங்கித் தருகிறார். ஏழை மக்களுக்கு அரிசி வாங்கித் தருகிறார். பொறுப்புள்ள ஒரு கலைஞனை அங்கீகரிப்பது தேசத்தின் பெருமை"
இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.