உக்ரைனில் மரணம் அடைந்த இரண்டாவது இந்திய மாணவர்: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Wednesday,March 02 2022]

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக ஏராளமான உயிரிழப்புகள் மற்றும் பொருள் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த போரை நிறுத்த இந்தியா உள்பட உலக நாடுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் நேற்று குண்டுவெடிப்பில் அகால மரணமடைந்தார் என்ற செய்தி இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மேலும் ஒரு இந்திய மாணவர் உக்ரைனில் மரணமடைந்தார் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சந்தன் ஜிண்டால் என்பவர் உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து வந்த நிலையில் திடீரென அவருக்கு மூளை சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் உக்ரைனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அவருடைய தந்தை தனது மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.