டி20-இல் டிரெண்டிங் ஆன ஜெர்சி… 12 வயது சிறுமிக்கு குவியும் பாராட்டு!

டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணியினர் அதிரடி காட்டிவருகின்றனர். இந்நிலையில் அவர்கள் அணிந்திருக்கும் ஜெர்சியும் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த ஜெர்சியை ஒரு 12 வயது சிறுமி உருவாக்கினார் என்ற தகவலும் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

டி20 உலகக்கோப்பை போட்டிகள் கடந்த 17 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் தகுதிச்சுற்றுப் போட்டியில் முதல் 4 இடத்தைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற முடியும். இதற்கான முதல் போட்டியில் கலந்துகொண்ட ஸ்காட்லாந்து அணி வங்கதேச அணியுடன் மோதி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றனர். அடுத்த போட்டியில் பப்புவா நியூகினியாவுடன் மோதி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

இதனால் ஸ்காட்லாந்து அணி சூப்பர் 12க்கான வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது. அடுத்து ஓமனுடன் நடைபெற இருக்கும் போட்டியில் ஸ்காட்லாந்து வெற்றிப்பெற்றால் சூப்பர் 12 க்குள் நுழைந்துவிடும். இப்படி டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்றில் மாஸ் காட்டிவரும் இந்த அணியைப் பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கூடவே அவர்களுடைய ஜெர்சியும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஊதா நிறத்தில் கருப்பு நிறம் கலந்து உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த ஜெர்சியைப் பற்றி ஸ்காட்லாந்து கிரிக்கெட் நிர்வாகம் ஒரு அரிய தகவலை வெளியிட்டு இருக்கிறது. அதாவது ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணிக்கான ஜெர்சியை உருவாக்கியது ஹேடிங்டனை சேர்ந்த 12 சிறுமி ரெபேக்கா டவுனி என்பவர்தானாம்.

200 பள்ளிக் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் ரெபேக்கா அந்நாட்டு தேசிய சின்னமான “திஸ்சில்“ எனப்படும் ஒரு செடியின் நிறத்தை வைத்து சீருடையை வடிவமைத்து இருக்கிறார். இந்தச் சீருடையைத்தான் ஸ்காட்லாந்து அணியினர் அணிந்து கொண்டுள்ளனர். இதையடுத்து ரசிகர்கள் 12 வயது சிறுமி ரெபேக்காவை கொண்டாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.