மாட்டுச்சாணம் கதிர்வீச்சை கட்டுப்படுத்துமா??? வகை தொகையாக கேள்வி எழுப்பும் 600 விஞ்ஞானிகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
செல்போனில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சைத் தடுக்கும் வகையில் மாட்டுச் சாணத்தை கொண்டு புதிய “சிப்” உருவாக்கப் பட்டுள்ளதாக ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தலைவர் கூறியிருக்கிறார். மேலும் இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக, இதற்கு அறிவியல் ஆதாரம் எங்கே? இந்த ஆய்வை மேற்கொண்டது யார்? முடிவுகள் எப்போது வெளியிடப் பட்டது? எனப் பல கேள்விகளைத் தொடுத்து 600 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ஆயோக் அமைப்பிற்கு தற்போது கடிதத்தை அனுப்பி உள்ளனர். இதனால் விஞ்ஞானிகளிடையே கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் ஒரு அமைப்பு. அதோடு மத்திய மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத் துறையின்கீழ் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. மேலும் கால்நடைகளை பாதுகாப்பது, அதன் வளர்ச்சியை மேம்படுத்துவது போன்றவை இந்த அமைப்பின் முக்கிய பணிகளாக இருந்து வருகிறது.
இந்த அமைப்பின் தலைவராக இருந்து வரும் வல்லபாய் கதிரியா கடந்த 12 ஆம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, “கவுசத்வா கவாச்சி’‘ எனும் ஒரு பொருளை அறிமுகப் படுத்தி இருந்தார். மேலும் அது பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட அட்டை என்றும் இதை சிப் என்று அழைக்கலாம் என்றும் விளக்கி இருந்தார். அதோடு இந்த சிப்பை எல்லோரும் வைத்திருக்கும்போது செல்போன்களால் ஏற்படும் கதிர்வீச்சில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் எனவும் அவர் கூறியிருந்தார்.
மேலும் கதிர்வீச்சை தடுக்கும் தன்மைக் கொண்ட இந்த சிப் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டது என்றும் இந்த சிப்பை மொபைல் போனில் பயன்படுத்தி கதிர்வீச்சை தடுக்க முடியும் என்றும் வல்லபாய் விளக்கம் அளித்தார். இதனால் மக்கள் நோயில் இருந்து தங்களை காத்துக் கொள்ள முடியும் என்றும் கருத்துத் தெரிவித்தார்.
இந்நிலையில் வல்லபாய் கதிரியாவின் கருத்தைக் கேட்ட சில விஞ்ஞானிகள் கடும் அதிர்ச்சி அடைந்து இதுபோன்ற ஆய்வுகள் நிரூபிக்க முடியாதது என விளக்கம் அளித்து உள்ளனர். மேலும் பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட சிப் எப்படி கதிர் வீச்சைத் தடுக்கும்? எந்த ஆய்வு இப்படி கூறியது? அந்த ஆய்வு எங்கு நடத்தப்பட்டது? என்ன மாதிரியான ஆய்வுகளில் எந்தெந்த முடிவுகள் கிடைத்தன?
மேலும் ஆய்வை மேற்கொண்ட வல்லுநர் யார்? அறிவியல் பூர்வமான ஆதாரங்களை வெளியிட வேண்டும்? அந்த ஆதாரங்களை நாளேட்டில் வெளியிட வேண்டும்? அந்த ஆதாரங்கள் எந்த நாளேட்டில் பிரசுரம் ஆகியது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்? எந்த மாதிரியான தரவுகள் சேகரிக்கப் பட்டன? ஆராய்ச்சியில் கிடைத்த விவரங்களையும் வெளியிட வேண்டும்? இப்படி பல கேள்வி கணைகளைத் தொடுத்து இருக்கிறது 600 க்கும் மேற்பட்ட ஒரு விஞ்ஞானிகள் குழு.
இந்தியன் மார்ச் ஃபார் சயின்ஸ் அமைப்பு எனும் அறிவியல் விஞ்ஞானிகள் கொண்ட குழுதான் இதுபோன்ற கேள்விகளை தொடுத்து ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்கிற்கு கடிதமாக அனுப்பி இருக்கிறது. இந்தக் கடிதத்தில் 600 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கேள்விகளை எழுப்பி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாட்டுச் சாணத்தால் உருவாக்கப்பட்ட சிப் பொது வெளியில் இப்படி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இதுகுறித்து மத்திய தொழில்நுட்ப மேம்பாட்டுத் துறையின் இயக்குநர் ரகுநாதன் நிச்சயமாக பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட சிப், செல்போன் கதிர்வீச்சை ஒருபோதும் தடுக்காது. அதற்கு வாய்ப்பே இல்லை. 100 ஆண்டுகளுக்கும் மேலாக கதிர்வீச்சு குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தக் கருத்துக்கு எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. பசுவின் சாணம் நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது என ஆய்வுகளில் கூறப்பட்டு உள்ளது. ஆனால் கதிர்வீச்சைத் தடுக்கும் தன்மைக் கொண்டது இல்லை என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டு உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments