3,000 ஆண்டு பழமை வாய்ந்த எகிப்து மம்மியின் குரல் செயற்கையாக உருவாக்கம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

3.000 ஆண்டு பழமையான ஒரு எகிப்து மதக் குருவின் 'குரல்' விஞ்ஞானிகளின் முயற்சியால் செயற்கையாக உருவாக்கப் பட்டுள்ளது. இந்த முயற்சி இறந்தவரின் மம்மியைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இதற்காக மம்மியின் குரல் வளையத்தை ஸ்கேன் செய்து 3டி வசதியுடன் செயற்கையாக வடிவமைப்பு செய்யப் பட்டது. செயற்கையான  குரல் வளைய அமைப்பிலிருந்து தற்போது விஞ்ஞானிகள் அவரின் குரலை உருவாக்கியுள்ளனர்.

3,000 ஆண்டுகள் பழமையான எகிப்திய மம்மி 3 டி அச்சிடப்பட்ட குரல்வழியுடன் 'பேசுகிறார்' என்பது விஞ்ஞானத்தின் அடுத்தக் கட்ட வளர்ச்சியினைக் காட்டுகிறது. இறந்த ஒரு மம்மியின் உடலில் இருந்து செயற்கையாக குரலை உருவாக்க முடியும் என்பதையும் அந்த குரல் ஒலி எவ்வாறு இருக்கும் என்பதையும் தற்போது விஞ்ஞானிகள் அனுமானித்துள்ளனர்.

பண்டைய கிரேக்கத்தில் உள்ள தீபெஸில் Thebas பிரம்மாண்டமான கர்னாக் கோவில் ஒன்று இருந்தது. அதில் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு, நெஸ்யமுன் என்பவர் மதத் துறவியாகப் பயிற்சி பெற்று வந்தார். ஒரு மிகச் சிறந்த எழுத்தாளராகவும், அறிவாளியாகவும் விளங்கிய அவர் இறந்தபோது,  உடல் மம்மியாக்கப் பட்டு Theban Necropolis என்ற இடத்தில் வைக்கப் பட்டது.

முறையாக மம்மி பாதுகாக்கப் பட்டு வந்ததால் 1823 இல் லீட்ஸ் அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப் பட்டது. தொடர்ந்து விஞ்ஞானிகள் மம்மியைப் பரிசோதனை செய்து வந்தனர். விரிவான பரிசோதனை மற்றும் X கதிர் சோதனையில் அவரது வாழ்க்கை மற்றும் உயிருடன் இருந்தபோது ஏற்பட்ட நோயின் தாக்கங்களைக் குறித்த செய்திகளை எல்லாம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வெளியிட்டனர்.

இந்த நிலையில் ஜனவரி 22 இல் ஒரு புதிய அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில் நெஸ்யமுன் மதகுருவின் குரல் இவ்வாறு தான் இருக்கும் என தெரிவிக்கப் பட்டது. நெஸ்யமுன் மம்மியின் குரல் வளையம் 3டி வசதியுடன் ஸ்கேன் செய்யப்பட்டு, குரல் வளையத்தின் மாதிரி உருவாக்கப் பட்டது. மாதிரியின் அமைப்பினைக் கொண்டு தொண்டை, வாய் போன்ற உறுப்புகளின் வடிவங்கள் கண்டுபிடிக்கப் பட்டன எனறும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டது. குரல் வளையத்தின் 3 டி மாதிரியை ஒரு ஒலிபெருக்கியின் வாயிலாக குரல் எவ்வாறு இருக்கும் என்பதையும் கண்டுபிடித்து உள்ளனர்.

ஒலிப் பெருக்கியின் மூலம் குரல் வளையத்தின் மாதிரியைக் கொண்டு பரிசோதனை செய்த போது அது ஒரு உயிரெழுத்து வடிவத்தை கொண்டிருந்தது என விஞ்ஞானிகள் அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.


 
தற்போது 5300 ஆண்டு பழமையான எட்ஸி தி ஐஸ்மேன் என்ற மம்மியின் குரலை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 1991 இல் ஆல்ப்ஸ் மலை அடுக்குகளில் இருந்து இந்த மம்மி கண்டுபிடிக்கப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.  நெஸ்யமுன்னின் குரல் வளையம் செயற்கையாக உருவாக்கப் பட்டது போலவே இந்த மம்மியின் குரல் வளையமும் ஸ்கேன் செய்யப் பட்டு அதற்கான குரலை உருவாக்கும் முயற்சி தொடரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குரல் ஒலிகளை மீண்டும் உருவாக்குவதன் மூலம் கடந்த காலத்தை பொது மக்களுக்கு காட்ட முடியும் என்பதோடு பழைமை மகிழ்ச்சி அளிக்கும் விதமாகவும் அமையும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.