ஜுபிடர் கிரகத்தின் புதிய புகைப்படத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள்!!!
- IndiaGlitz, [Monday,May 11 2020]
சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய கிரகமாக அறியப்படுவது வியாழன் என்ற ஜுபிடர் கிரகம் ஆகும். இது பூமியை விட ஆயிரம் மடங்கு அதிக கொள்ளளவு கொண்டது. சூரியனில் இருந்து ஐந்தாவது வளையத்தில் இந்த கிரகம் அமைந்திருக்கிறது. இதில் திடமான மேற்பரப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கிரகம் முழுவதும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்தின் வாயுக்கள் மட்டுமே நிறைந்திருப்பதால் வாயுக்கிரகம் எனவும் இதை அழைக்கின்றனர். மேலும், திரவ நிலையில் உலோகத் தன்மையிலான ஹைட்ரஜன் இந்த கிரகத்தில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. அவ்வபோது ஜுபிடர் கிரகத்தில் நிலவும் காந்தப் புலத்திற்கு திரவ நிலையிலான இந்த ஹைட்ரஜனே காரணம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஜுபிடர் கிரகம் எப்படியிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள விதத்தில் அவ்வபோது சில புகைப்படங்களை விஞ்ஞானிகள் தொலை நோக்கியைக் கொண்டு உருவாக்கி வருகின்றனர். தற்போது அதேபோல ஒரு புகைப்படம் விஞ்ஞானிகளால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. ஹவாய் தீவில் உள்ள ஜெமினி வடக்கு தொலை நோக்கியால் இந்தப் புகைப்படம் உருவாக்கப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்குமுன் பூமியில் இருந்து இவ்வளவு துல்லியமாக எந்த ஒரு கிரகத்தின் புகைப்படமும் உருவாக்கப்பட வில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்தப் புகைப்படத்தை உருவாக்குவதற்காக “லக்கி இமேஜ்” என்ற தொழில்நுட்பத்தை வானியலாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த தொழில் நுட்பத்தால் மங்கலான பகுதிகள் தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. பல புகைப்படங்களை எடுத்து அனைத்தையும் ஒன்றாக இணைத்து இந்தப் புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நாசா விண்வெளி ஆராய்ச்சி துறை, வியாழன் கிரகத்தின் மேல் ஒளிக்கோவைகள் நிகழ்வது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.
நாசா வெளியிட்ட அந்தப் பழைய புகைப்படத்தில் ஜுபிடர் துருவங்களில் காணப்படும் அரோரா என்ற ஒளிக்கோவையை தெளிவாக காண முடிந்தது. அணுவை விட சிறிய துகள்களால் ஆனவையே இந்த ஒளிக்கோவைகள். சிறிய துகள்கள் விண்வெளியில் பறக்கும்போது கிரகத்தின் காந்த புலத்தால் ஈர்க்கப்பட்டு வட அல்லது தென் துருவத்துக்குத் தள்ளப்படும்போது இந்த ஒளிக்கோவைகள் நிகழ்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.