குழந்தை பெறுவதற்கு சரியான வயது எது? ஆய்வில் வெளியான புது தகவல்!

  • IndiaGlitz, [Friday,July 07 2023]

பெண்கள் குழந்தைப் பெற்றுக்கொள்வதற்கு பாதுகாப்பான வயது எது என்பது குறித்தும் கருவில் குரோமோசோம் அல்லாத மற்ற பிறப்பு குறைபாடுகள் ஏற்படுவது குறித்தும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்டில் பகுதியில் அமைந்திருக்கும் செம்மல்வீஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழந்தைப் பேற்றுக்கான பாதுபாக்கான வயது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அந்த ஆய்வில் பெண்கள் குழந்தைப் பெற்றுக்கொள்ள பாதுகாப்பான வயது 23-32 என்பதும் அந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது பிறப்பு குறைபாடுகள் மிகக் குறைவாக இருப்பதையும் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் மேலைநாடுகளில் பெண்கள் பலரும் வயது முதிர்ந்த பிறகே குழந்தைகளை பெற்றுக்கொள்ள முன்வருகின்றனர். அந்த வகையில் முன்னதாக நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளில் பெண்களின் குழந்தை பெறும் வயதிற்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் டவுண் சிண்ரோம் போன்ற குறைபாடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் குரோமோசோம்களால் மட்டுமல்லாமல் கரு உற்பத்தி ஆகும்போது ஏற்படும் பிற குறைபாடுகளுக்கும் பெண்களின் குழந்தை பெறும் வயதிற்கும் உள்ள தொடர்பு குறித்து மேற்கொள்ளபட்ட ஆய்வில் பல புதிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

அதில் பெண்கள் குழந்தை பெறுவதற்கு பாதுகாப்பான வயது 23-32 எனக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது அந்த வயதில் பிறப்பு குறைபாடுகள் மிகக்குறைவு. இந்த வயதில் சிறந்த குழந்தைகள் பிறப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் 22 வயதிற்கு முன்பு பிறக்கும் குழந்தைகளுக்கு குரோமோசோம் அல்லாத பாதிப்புகள் 25% ஆக இருப்பதாகவும் மேலும் 20 வயதிற்கு முன்பு பிறக்கும் குழந்தைகளுக்கான ஆபத்து இன்னும் சற்று அதிகமாக இருப்பதாகவும் ஆய்வு சுட்டிக்காட்டி இருக்கிறது.

இதைத்தவிர 32 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும்போது அவர்களின் கருவில் 15% அளவிற்கு ஆபத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பெண்களின் வயது பிரச்சனைகளினால் அவர்களின் கருவின் மைய நரம்பு மண்டலத்தில் குறைபாடுகள் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள நிலையில் இது குழந்தையின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் முக்கியமானது என்றும் அதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அந்த ஆய்வின் தலைமை மருத்துவர் டாக்டர் போக்லர்கா பெத்தோ குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக வயதான பெண்கள் கர்ப்பம் அடையும்போது சில அசாதாரணமான நிலைகளை சந்தித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கருவின் தலை, கழுத்து காதுகள் மற்றும் கண்களின் பிறவி கோளாறுகள் என்று அவர்களுக்கான ஆபத்து இரட்டிப்பு 100% - ஆக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் இதனால் தான் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கர்ப்பம் அடையும்போது அதிக கவனம் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.

செம்மல்வீஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்விற்கு 1980 -2009 வரை கேஸ் கண்ட்ரோல் சர்வேய்லன்ஸ் ஆஃப் கன்ஜெனிட்டல் அபார்மாலிட்டியால் சேகரிக்கப்பட்ட தரவுகள் எடுத்துக் கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுக்கான தரவுகளை அடிப்படையாக வைத்துக்கொண்டே இத்தகைய முடிவிற்கு வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பற்ற வயதில் உள்ள பெண்கள் கருவுறும்போது குரோமோசோம் அல்லாத வளர்ச்சி கோளாறினால் 31,128 பேர் பாதிப்பு அடைந்ததை சந்தித்தாகவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் செம்மல்வீஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ள இந்த ஆய்வு கருத்துகள் BJOG எனப்படும் மகப்பேறு குறித்த சர்வதேச ஆய்விதழில் வெளியிடப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.