கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது: பிலிப்பைன்ஸ் அரசின் அதிரடி முடிவு!!!
- IndiaGlitz, [Tuesday,June 09 2020]
உலகம் முழுவதும் கொரோனா பரவலால் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த 3 மாதமாக மூடிக் கிடக்கிறது. இந்நிலையில் தள்ளிப்போன தேர்வுகளை எப்படி வைப்பது என உலக நாடுகள் சிந்தித்து வருகின்றன. பல நாடுகளில் இணைய வகுப்புகள், தேர்வுகள் என்ற முறையைக் கையாண்டு வருகிறது. இந்நிலையில் பிலிப்பைன்ஸ் அரசு எங்களது நாட்டில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரையில் பள்ளிகள் திறக்கப்படாது என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று ஒரே நாளில் 579 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் 22,474 ஆக கொரோனா எண்ணிக்கை உயர்ந்து இருக்கிறது. மேலும் 1000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் பள்ளிகளை திறப்பது என்பது முடியாத காரியம். குழந்தைகளை சமூக விலகலில் அனுமதித்தாலும் நோய்த்தொற்று எளிதாகத் தொற்றிக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப் படும் வரையில் பள்ளிகளை திறப்பதற்கு வாய்ப்பில்லை என்று பிலிப்பைன்ஸ் நாட்டின் கல்வித்துறை செயலர் லியோனர் பிரியோன்ஸ் தெரிவித்து இருக்கிறார்.
மேலும், ஆகஸ்ட் இறுதி வாரம் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகளையும் அந்நாடு கவனித்து வருகிறது. இணைய வசதி இல்லாத சூழலில் இருக்கும் குழந்தைகளின் நிலைமையைச் சமாளிக்க அந்நாட்டு அரசு பல புதிய திட்டங்களைத் தீட்டி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்நாடு ஜுன் 1 முதல் ஊரடங்கில் சில விதிமுறைகளைத் தளர்த்தி இருக்கிறது. ஆனாலும் பள்ளிகள் உறுதியாகத் திறக்கப்படாது என்ற முடிவினையும் அந்த அரசு வெளியிட்டு இருக்கிறது.