தமிழகத்தில் வரும் ஜுலையில் பள்ளிகள் திறப்பு?

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் வரும் ஜுலையில் திறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா பரவலின் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் (2020-21 ஆம் கல்வியாண்டு) ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் 12 ஆம் வகுப்பிற்கு மட்டும் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டு தற்போது ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டு உள்ளதால் மதிப்பெண்களை கணக்கிட குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் 2021-22 ஆம் கல்வியாண்டு துவங்கியுள்ளது. கூடவே கொரோனா பரவலின் இரண்டாம் அலையும் சற்று தணிந்து வருகிறது.

இதையடுத்து வரும் ஜுன் 3 ஆம் வாரத்தில் இருந்து தமிழகப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பை தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவுறித்து இருக்கிறது. மேலும் தனியார்கள் பள்ளிகள் ஜுன் முதல் வாரத்திலேயே ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடங்கி நடத்த திட்டமிட்டு வருகிறது.

இதனால் வரும் ஜுலையில் அனைத்துப் பள்ளிகளையும் திறக்க தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவ்வாறு திறக்கப்படும்போது மாணவர்கள், ஆசிரியர்களுக்கு என தனியாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட உள்ளது.

மேலும் பள்ளிகளில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முறைப்படுத்த ஜுன் 14 ஆம் தேதி முதல் அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகை புரிய கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. மேலும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளவும் தமிழக அரசு வலியுறித்தி உள்ளது.