மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை… வீட்டுச்சுவரில் பாடம் நடத்தி அசத்தும் பள்ளி!!!

  • IndiaGlitz, [Tuesday,August 25 2020]

 

கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கிறது. ஆனால் மாணவர்களின் கல்வி தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தற்போது பல கல்வி நிறுவனங்கள் ஆன்லைனில் வகுப்புகளை தொடங்கி இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இருக்கும் அனைத்து மாணவர்களிடமும் ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பதற்கு ஸ்மார்ட்போன், இணையவசதி போன்றவை இல்லாமல் இருக்கிறது. இந்தக் குறைபாட்டை களைவதற்குத் தேவையானை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சேலாப்பூர் அடுத்த நிலம்பூர் பகுதியில் செயல்படும் ஆஷா மராத்தி வித்யாலயா என்ற பள்ளி ஒரு வித்தியாசமான நடைமுறையைத் தொடங்கி இருக்கிறது. இந்தப் பள்ளியில் மொத்தம் 1,700 குழந்தைகள் படிக்கிறார்களாம். கிராமப் பகுதியில் செயல்படும் இந்தப் பள்ளியில் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் மற்றும் கடைகளில் வேலைப் பார்க்கும் சாதாரண ஏழைமக்களின் குழந்தைகள் கல்வி பயின்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் வகுப்புகளை ஆன்லைனில் தொடங்குவதற்கு தேவையான ஸ்மார்ட்போன் வசதி இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு பள்ளி நிர்வாகம் ஒரு வித்தியாசமான முடிவெடுத்து நிலம்பூர் பகுதியில் உள்ள 300 க்கும் மேற்பட்ட வீடுகளில் தற்போது பள்ளி பாடங்களை எழுதியும் வரைந்தும் வைத்திருக்கிறது. பல கஷ்டமான பாடங்கள்கூட தற்போது மாணவர்களின் வீடுகளில் வரைபடங்களாகவும், கணித குறியீடுகளாகவும் மிக எளிமையான முறையில் விளக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மாணவர்கள் ஸ்மார்டபோனை தேட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. சமூக இடைவெளியோடு தேவைப்படும் நேரங்களில் பாடங்களை வீட்டிற்கு வெளியே வந்து கற்றுக்கொள்ளலாம். தேவைப்பட்டால் மீண்டும் அந்தச் சுவற்றைப் பார்த்து நினைவுப்படுத்திக் கொள்ளலாம் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாணவர்களின்மீது உண்மையான அக்கறைக் கொண்ட ஒருசில பள்ளிகளின் இதுபோன்ற நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.