பாலியல் வன்கொடுமை வழக்கில் உச்சப்பட்ச தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு!

  • IndiaGlitz, [Wednesday,February 17 2021]

பீகாரில் 11 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தலைமை ஆசிரியருக்கு மரணத் தண்டனை வழங்கி பாட்னா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதில் இன்னொரு குற்றவாளியான ஆசிரியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பீகார் மாநிலம் புல்வாரி ஷரீப் பகுதியில் இயங்கி வந்த பள்ளி ஒன்றில் 11 வயது சிறுமி 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவிக்கு கடந்த 2018 செப்டம்பர் மாதத்தில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். இந்நிலையில் மாணவியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருக்கிறார் எனத் தெரிவித்து உள்ளனர். இதனால் அதிர்ந்து போன பெற்றோர் இதுகுறித்து குழந்தையிடம் விசாரணை செய்தனர்.

இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் அரவிந்த் குமார் மற்றும் இன்னொரு ஆசிரியரான அபிஷேக்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறியுள்ளார். அதனால் இதுகுறித்து போக்ஷோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டது. இந்த வழக்கின் விசாரணை பாட்னா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதற்கான தீர்ப்பை நீதிபதி அவதேஷ் குமார் நேற்று வெளியிட்டார்.

அதில் பாலியல் வன்கொடுமை வழக்கில் முதன்மை குற்றவாளியான பள்ளி தலைமை ஆசிரியருக்கு மரணத்தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளார். இதில் மற்றொரு குற்றவாளியான ஆசிரியர் அபிஷேக் குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்ப்புக்கு பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.