அன்று சாம்பியன் வீராங்கனை… இன்று பெட்ரோல் பங்கில் டோக்கன் கொடுக்கும் அவலம்!
- IndiaGlitz, [Wednesday,August 11 2021]
பள்ளியில் படிக்கும்போதே தேசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற விராங்கனை ஒருவர் தற்போது பெட்ரோல் பங்கில் டோக்கன் கொடுக்கும் வேலையை செய்துவரும் அவலம் நடைபெற்று இருக்கிறது. இந்தக் காட்சிகளைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை ரித்தூ பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய குத்துச்சண்டை போட்டிக்கான 63 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். கொடுமையான வறுமை சூழலில் வாழ்ந்துவந்த இவர் தனது தந்தையின் இறப்புக்கு பின்னால் கடந்த 2017 முதலே வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்.
தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற பிறகும் இவருக்கு எந்த அரசாங்க வேலையோ அல்லது வேலைக்கான முன்னுரிமையோ கிடைக்கவில்லை. தற்போத 23 வயதாகும் ரித்தூ தனது சகோதரர்களுக்காகவும் தனக்காகவும் பெட்ரோல் பங்கில் தினக்கூலியாக வேலைப்பார்த்து வருகிறார். டோக்கன் கொடுக்கும் இந்த வேலைக்காக ரித்தூ தினமும் ரூ.350 வாங்குவதாகக் கூறப்படுகிறது.
தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி முடிந்த நிலையில் அதில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகள் பலரும் பதக்கங்களை வென்றதன் மூலம் பல்வேறு பரிசுகளை குவித்து வருகின்றனர். மேலும் அரசாங்கத்தின் முதல்நிலை வேலைப் பிரிவுகளில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டு இரக்கிறது.
இப்படி இருக்கும்போது தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சிறு வயதிலேயே பதக்கம் வென்ற ஒரு வீராங்கனை தற்போது தினக்கூலியாக வேலைப்பார்க்கும் அவலம் சோஷியல் மீடியாவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் வறுமை காரணமாக ரித்தூவின் பள்ளிப் படிப்பு மற்றும் விளையாட்டுக் கனவும் தூள்தூளாக மாறி இருக்கிறது. இதனால் வறுமையில் வாடும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான வசதிகளைச் செய்துகொடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.